< Back
மாநில செய்திகள்
முதுமலை யானைகள் முகாமில் சமயபுரம் கோவில் யானையை பராமரிக்க வேண்டும் - ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

முதுமலை யானைகள் முகாமில் சமயபுரம் கோவில் யானையை பராமரிக்க வேண்டும் - ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு

தினத்தந்தி
|
29 Feb 2024 4:33 PM IST

வாரம் ஒருமுறை கால்நடைத்துறை மருத்துவர்கள் யானையை பரிசோதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

மதுரை,

சென்னையைச் சேர்ந்த ஆண்டனி கிளமெண்ட் என்பவர் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்," மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் பரிசாக 2016-ம் ஆண்டு திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு முதுமலை தெப்பக்காட்டில் வளர்ந்த யானை மசினியை வழங்கினார். யானைப் பாகன் கஜேந்திரன் கண்காணிப்பில் யானை மசினி வளர்ந்தது. வனப்பகுதியில் இருந்தபோது சுறுசுறுப்பாக இருந்த யானை, மற்ற யானைகளிடமிருந்து பிரிந்து கோவிலுக்கு வந்தபின் அதன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மே 25-ந்தேதி மசினி யானைக்கு மதம் பிடித்த நிலையில், பாகன் கஜேந்திரனை மிதித்து கொன்றது. இந்த சம்பவத்தையடுத்து மசினி யானை தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை ஆராய்ச்சி கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டது. தஞ்சாவூர் ஒரத்தநாடு கால்நடை ஆராய்ச்சி கல்லூரியில் உள்ள சமயபுரம் கோவில் யானையை, முதுமலை தெப்பக்காட்டு யானைகள் முகாமில் சேர்க்க உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மசினி யானையை முதுமலை தெப்பக்காடு முகாமில் சேர்த்து போதிய மருத்துவ சிகிச்சை வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி தனபால் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் தரப்பில் ஆஜரான வக்கீல், யானை தற்போது நல்ல உடல் நலத்தோடு ஆரோக்கியமாக உள்ளது. யானை பராமரிப்புக்காக கோவில் நிர்வாகம் சார்பில் 10 லட்சம் ரூபாய் வனத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், முதுமலை யானைகள் முகாமில் வனத்துறை அதிகாரிகள் சமயபுரம் கோவில் யானையை தொடர்ந்து பராமரிக்கவும் கண்காணிக்கவும் வேண்டும் என்றும் வாரம் ஒருமுறை கால்நடைத்துறை மருத்துவர்கள் யானையை பரிசோதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் செய்திகள்