திருச்சி
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
|சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா தொடங்கியது.
சமயபுரம்:
சமயபுரம் மாரியம்மன் கோவில்
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். ஸ்ரீரங்கம் கோவிலின் மூலவரை போன்று, இக்கோவிலில் சுதையினாலான சுயம்புவடிவமாக 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி 27 எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டை செய்து, இத்தலத்தில் மகாமாரியம்மன் அருள்பாலிப்பது தனிச்சிறப்பு ஆகும்.
அம்மனின் சுயம்பு திருமேனியில் நவக்கிரக ஆதிக்கத்தை உள்ளடக்கி நவக்கிரகங்களை நவ சர்ப்பங்களாக திருமேனியில் தரித்து அருள்பாலிப்பதால், அம்மனை தரிசனம் செய்வதன் மூலம் நவக்கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். மேலும் தட்சன் யாகத்துக்கு சென்ற தாட்சாயணியை தூக்கி சிவபெருமான் ருத்ரதாண்டவம் ஆடியபோது அம்மனின் திருக்கண் இப்பகுதியில் விழுந்ததால் இத்திருத்தலத்திற்கு கண்ணனூர் என்ற பெயர் இருந்து வருகிறது. மிகத்தொன்மையான உற்சவ அம்மனின் திருமேனியில் ஆயிரம் கண்கள் உள்ளன. இது, இத்தலத்தின் பெருமையை விளக்குவதாக அமைந்துள்ளது.
பூச்சொரிதல் விழா
இத்திருத்தலத்தில் அம்மன் அஷ்ட புஜங்களுடன் இருப்பது வேறு எந்த மாரியம்மன் கோவிலிலும் காணக்கிடைக்காத அரிய காட்சியாகும். மேலும், மாரியம்மன் வடிவங்களில் ஆதிபீடம் சமயபுரம் ஆகும். இத்தகைய சிறப்புமிக்க சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பூச்சொரிதல் விழா வெகுசிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று அதிகாலை விக்னேஷ்வர பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து காலை 6.35 மணிக்கு கோவில் கொடிமரம் முன்பிருந்து கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் அதிர்வேட்டுகள் ஒலிக்க, மேளதாளங்கள் முழங்க யானை மீது தட்டுகளில் பூக்களை வைத்து கடைவீதி, சன்னதி வீதி வழியாக கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு பூக்கள் சாற்றப்பட்டன. பின்னர் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பக்தர்கள் வழிபாடு
பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் படத்தை வைத்து கோவிலுக்கு பூக்களை எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர். மேலும் அக்னி சட்டி ஏந்தியும், அழகு குத்தியும், கரும்புத்தொட்டிலில் குழந்தையை சுமந்து வந்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் மணியக்காரர் பழனிவேல் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் 3 கூடுதல் சூப்பிரண்டுகள், 13 துணை சூப்பிரண்டுகள், 25 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட சுமார் 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நேற்று காலை முதல் இன்று (திங்கட்கிழமை) காலை வரை பக்தர்கள் கட்டணமின்றி தரிசனம் செய்வதற்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
பச்சை பட்டினி விரதம்
மும்மூர்த்திகளை நோக்கியும், மாயசூரனை வதம் செய்த பாவம் நீங்கவும், உலக நன்மைக்காகவும், இத்திருத்தலத்தில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க மரபுமாறி அம்மனே பக்தர்களுக்காக 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் மேற்கொள்வது இக்கோவிலின் தனிச்சிறப்பு ஆகும். ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாத கடைசி ஞாயிறு வரை இந்த விரதம் கடைபிடிக்கப்படும். இந்த 28 நாட்களும் கோவிலில் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவு, நீர்மோர், கரும்பு, பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
பெண் பக்தர்கள் அதிருப்தி
பூச்சொரிதல் விழாவையொட்டி நேற்று காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் பல்வேறு இடங்களில் இருந்தும் பூக்களை எடுத்து வந்ததால் சமயபுரம் நகரமே போக்குவரத்து நெரிசலில் திக்குமுக்காடியது. பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியிலும், பாதுகாப்புக்காகவும் வந்திருந்த வெளி மாவட்ட போலீசார் அப்பணியை மேற்கொள்ளாமல், பல்வேறு குழுக்களாக ஆங்காங்கே அமர்ந்து தங்களுடைய செல்போனை பார்த்து கொண்டிருந்தனர். இந்நிலையில் கோவில் மூலஸ்தானத்திற்குள் சென்ற பக்தர்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை. மேலும் அம்மனுக்கு பூக்களை சாற்றிவிட்டு மூலஸ்தானத்தில் இருந்து வெளியே வந்த பெண் பக்தர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் ஒருமையில், தகாத வார்த்தையால் திட்டியதால் பெண் பக்தர்கள் வேதனை அடைந்தனர். இதைத்தொடர்ந்து அந்த போலீஸ் அதிகாரிக்கும், பக்தர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த சமயபுரம் இன்ஸ்பெக்டர் கருணாகரன் அங்கு வந்து பக்தர்களை சமாதானப்படுத்தினார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-----------------