< Back
மாநில செய்திகள்
அண்ணா நினைவு தினத்தையொட்டி கோவில்களில் சமபந்தி விருந்து
திருவள்ளூர்
மாநில செய்திகள்

அண்ணா நினைவு தினத்தையொட்டி கோவில்களில் சமபந்தி விருந்து

தினத்தந்தி
|
4 Feb 2023 2:18 PM IST

பேரறிஞர் அண்ணா நினைவு தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சமபந்தி விருந்து நடைபெற்றது.

பேரறிஞர் அண்ணா 54-வது நினைவு தினத்தையொட்டி நேற்று திருத்தணி முருகன் கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சமபந்தி விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவில் துணை ஆணையர் விஜயா, திருத்தணி தாசில்தார் வெண்ணிலா ஆகியோர் கலந்து கொண்டு சமபந்தி விருந்தை தொடங்கி வைத்தனர். இதில் பக்தர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

இதைபோல் திருவள்ளூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா உருவ சிலைக்கு திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சிறுவாபுரி முருகன் கோவிலில் அண்ணாவின் நினைவு நாளையொட்டி 600 பேருக்கு உணவு விருந்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக சோழவரம் ஒன்றிய தி.மு.க செயலாளர் செல்வசேகரன், மாவட்ட கவுன்சிலர் தேவிதயாளன், ஒன்றிய கவுன்சிலர் சந்திரசேகர், ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சிராணி ராஜா மற்றும் கழக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

இதைபோல் ஆரணி பஸ் நிறுத்தம் அருகே உள்ள அண்ணாவின் உருவ சிலைக்கு ஆரணி பேரூராட்சி தி.மு.க செயலாளர் பி.முத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில் அவைத்தலைவர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி கண்ணதாசன், பேரூர் பொருளாளர் கரிகாலன், பேரூர் துணை செயலாளர்கள் கோபிநாத், நிலவழகன், கலையரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் கோவிலில் 3,000 பேருக்கு பொது விருந்து நடைபெற்றது. இதில் கோவில் அறங்காவலர் லோகமித்ரா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சிவாஜி, மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு ஏழை பெண்களுக்கு இலவச புடவைகளை வழங்கினர். நிகழ்ச்சியில், எல்லாபுரம் ஒன்றிய தலைவர் வடமதுரை ரமேஷ் பலர் கலந்துக்கொண்டனர்.

ஊத்துக்கோட்டையில் தி.மு.க. சார்பில் அண்ணாவின் முழு உருவ சிலைக்கு நகர தி.மு.க. செயலாளர் அபிராமி மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தினார். இதில் அவைத் தலைவர் வெங்கடேசன், பொருளாளர் ஜெயராமன், பேரூராட்சித் தலைவர் அப்துல் ரஷீத், துணைத் தலைவர் குமரவேல், வார்டு கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

மேலும் செய்திகள்