பெரம்பலூர்
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சமபந்தி விருந்து
|சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திர தினவிழாவையொட்டி 121 ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபைக்கூட்டங்கள் நடைபெற்றன. ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் பாடாலூர் ஊராட்சிக்குட்பட்ட திருவளக்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கற்பகம் பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தூய்மையான குடிநீர் வினியோகம், இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், 15-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. மேலும் வரவு-செலவு வாசித்து ஒப்புதல் பெறப்பட்டன. இதர வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டன. அதனைத்தொடர்ந்து சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமை பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் சுதந்திர தின விழாவையொட்டி நடந்த பொது வழிபாடு மற்றும் சமபந்தி விருந்தில் மாவட்ட கலெக்டர் மற்றும் பெரம்பலூர் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். இதில் அரசு அதிகாரிகள் மற்றும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.