சேலம்
சேலத்தில் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 10 பவுன் நகை, பணம் திருட்டு
|சேலத்தில் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 10 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் திருட்டு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் திருட்டு
சேலம் பள்ளப்பட்டி குப்தா நகர் 7-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் ஹரி பிரசாத். இவருடைய மனைவி தேவி பாலா. இவர் சைபர் கிரைம் போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு தேவி பாலா 2-வது மாடியில் உள்ள அறையில் குடும்பத்தினருடன் தூங்கினார். முதல் மாடியில் உள்ள ஒரு அறையில் அவருடைய மாமியார் தூங்கி உள்ளார்.
இந்த நிலையில் தேவி பாலா நேற்று காலை எழுந்து பார்த்த போது வீட்டில் உள்ள பீரோ திறந்து கிடந்துள்ளது. இதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவிபாலா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். திருட்டு போன நகை, பணம் மற்றும் செல்போன்களின் மதிப்பு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.