சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முறைகேடு - மேலும் 2 பேரிடம் போலீசார் விசாரணை
|ஏற்கனவே பேராசிரியர்கள் சுப்ரமணிய பாரதி, ஜெயராமன், ஜெயக்குமார், நரேஷ்குமார் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.
சேலம்,
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், விதிகளை மீறி, அரசு அனுமதியின்றி பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை தனக்கு சொந்தமான பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்பின் மூலம் நிதி முறைகேடு செய்ததாகவும், பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் சிலரை சாதிப் பெயர் சொல்லி திட்டியதாகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெகநாதனை கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் உட்பட 5 பேருக்கு கருப்பூர் காவல் நிலையம் சம்மன் அனுப்பியது. இதனால் பேராசிரியர்கள் சுப்ரமணிய பாரதி, ஜெயராமன், ஜெயக்குமார், நரேஷ்குமார் மற்றும் ஊழியர் தந்தீஸ்வரன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜர் ஆகினர். இவர்களிடம் சூரமங்கலம் உதவி ஆணையாளர் தலைமையில் விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில் புதிய புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இதில் தீனதயாள் உபாத்தியாயா கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் மாணவர்களின் பயிற்சிக்காக ஒதுக்கிய நிதியில் முறைகேடு செய்துள்ளதாக மாணவர்கள் சிலர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தனர். இதில், திட்டத்தின் கீழ் வரும் நிதியானது முழுமையாக எங்களது பயிற்சிக்கு பயன்படுத்தப்படவில்லை என்று கூறி 3 பேர் மீது புகார் அளித்திருந்தனர்.
இது தொடர்பாக பல்கலைக்கழகத்தில் 6 இடங்களில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக பல்கலைகழகத்தில் உள்ள மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட பயிற்சி மையத்தில் போலீசார் சோதனை செய்தனர். மேலும் இதில் பணியாற்றிய வனிதா மற்றும் பரமேஸ்வரி ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.