< Back
மாநில செய்திகள்
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவு வளைவில் அதன் நிறுவனரின் சிலையை வைக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவு வளைவில் அதன் நிறுவனரின் சிலையை வைக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
17 Dec 2023 7:02 PM IST

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் சிலையை அங்கு வைக்கும் முயற்சியை கைவிட வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

டி.ஆர்.சுந்தரத்தால் 1930-களில் துவங்கப்பட்ட சேலம், மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம், 1982-ஆம் ஆண்டு வரை 150-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் மற்றும் ஆங்கில மொழிப் படங்களை தயாரித்த பெருமைக்குரிய நிறுவனம் ஆகும். ஒழுங்குக் கட்டுப்பாட்டுடன் ஒரு தொழிற்சாலையை போல் நடத்தப்பட்ட நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம். 'சதி அகல்யா' என்ற படத்தை முதலில் தயாரித்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம், இரட்டை வேடத்தை அறிமுகம் செய்தது, முதல் மலையாளப் படத்தை எடுத்தது, முதல் சிங்களப் படத்தை எடுத்தது, தமிழ்நாட்டில் முதல் ஆங்கிலப் படத்தை எடுத்தது என பல சாதனைகளை படைத்தது.

திகம்பர சாமியார், பாக்தாத் திருடன், அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என பல வெற்றிப் படங்களை தயாரித்த நிறுவனம் மாடர்ன் தியேட்டஸ் நிறுவனம். இந்தியாவின் ஐந்து முன்னாள் முதல்-அமைச்சர்களுக்கு திருப்புமுனையாக அமைந்த நிறுவனம் மாடர்ன் தியேட்டஸ் நிறுவனம். பல பாடகர்களையும், கவிஞர்களையும், வசனகர்த்தாக்களையும் உருவாக்கிய நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம்.

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் குடியிருப்புகளாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில், மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவாக தற்போது இருப்பது வளைவு மட்டும்தான். மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை உருவாக்கிய டி.ஆர். சுந்தரத்தின் புகழ் இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டுமென்றால், டி.ஆர். சுந்தரத்துடைய சிலை நுழைவாயிலில் வைக்கப்பட வேண்டுமென்பதே தமிழக மக்களின் விருப்பமாகவும், அவரது உறவினர்களின் விருப்பமாகவும் இருக்கிறது.

இந்த நிலையில், அங்கு முன்னாள் முதல்-அமைச்சர் மு. கருணாநிதியின் சிலையை வைக்க வேண்டும் என்பது முதல்-அமைச்சரின் விருப்பம் என்று தெரிவித்து அந்த இடத்தை ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியதாக நில உரிமையாளர்கள் தெரிவித்ததாகவும், இதுகுறித்து குடும்பத்தினருடன் பேசி முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்ததாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் நில உரிமையாளர்களுக்கு தொடர்ந்து தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும், அச்சுறுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. தி.மு.க. அரசின் அதிகார துஷ்பிரயோகம் கடும் கண்டனத்திற்குரியது.

தி.மு.க. அரசின் செயல்பாட்டினைப் பார்க்கும்போது, பேரறிஞர் அண்ணா கூறிய, "அதிகாரம், கள்ளினும் காமத்தினும் போதைமிக்கது. அதிக அதிகாரம் அளவு கடந்த போதையைத் தரும். அதிகாரத்தைக் கையாண்டு ஒருமுறை அனுபவப்பட்டுவிட்டவர்கள், வெகு சுலபத்தில் அதனைக் கைவிடத்துணியார்" என்ற பொன்மொழிதான் பொதுமக்களின் நினைவிற்கு வருகிறது. இந்த அதிகாரம் என்ற போதைதான் தி.மு.க. அரசை தற்போது ஆட்டிப்படைக்கிறது.

பொதுமக்களின் விருப்பத்திற்கிணங்கவும், நில உரிமையாளர்களின் விருப்பத்திற்கிணங்கவும், அங்கு மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனர் டி.ஆர்.சுந்தரத்தின் சிலையை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் சிலையை அங்கு வைக்கும் முயற்சியை கைவிட வேண்டுமென்றும் முதல்-அமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்