சேலம்
சேலம் மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு-கிலோ ரூ.110-க்கு விற்பனை
|சேலம் மார்க்கெட்டில் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சேலம்,
தக்காளி சாகுபடி
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் வாழப்பாடி, அருநூத்துமலை, மேட்டூர், மேச்சேரி, கருமந்துறை உள்ளிட்ட சில பகுதிகளில் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். சேலம் மாநகரில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, தாதகாப்பட்டி, அம்மாப்பேட்டை உள்பட மாவட்டம் முழுவதும் 11 உழவர் சந்தைகள் உள்ளன.
இந்த உழவர் சந்தைகளுக்கு உள்ளூர் பகுதிகளில் இருந்தும், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள விவசாய குழுக்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதுதவிர சேலத்தில் உள்ள தினசரி மார்க்கெட்டிற்கும் வெளி மாவட்டங்களில் இருந்து தான் மொத்த வியாபாரிகள் தக்காளியை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.
கிடுகிடு உயர்வு
கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தக்காளி விலை உயர்ந்து கிடுகிடுவென காணப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் நேற்று முன்தினம் தக்காளி கிலோ ரூ.85 வரை விற்பனையானது. இது நேற்று மேலும் உயர்ந்து கிலோ ரூ.92 வரை விற்பனை செய்யப்பட்டது.
வெளி மார்க்கெட்டுகளில் தக்காளி கிலோ ரூ.110 வரை வியாபாரிகள் விற்பனை செய்தனர். தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள், ஓட்டல் உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தக்காளியை கிலோ கணக்கில் வாங்கி சென்ற பொதுமக்கள் தற்போது குறைந்த அளவில் வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. மேலும் பெரும்பாலான உணவகங்களில் தக்காளி கூட்டு, தக்காளி சட்னி வைப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
பசுமை அங்காடியில்..
தக்காளி விலை உயர்வு குறித்து உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில், வழக்கமான நாட்களில் உழவர் சந்தைக்கு 8 டன் வரை தக்காளி கொண்டு வரப்படும். ஆனால் விலை உயர்வு காரணமாக தற்போது 6 டன் வரை மட்டுமே கொண்டு வரப்படுகிறது.
தற்போது பெய்த மழையின் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் வரத்து குறைந்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் வரத்து அதிகரிக்க தொடங்கியவுடன் விலை குறைய வாய்ப்புள்ளது. மேலும் பசுமை அங்காடியில் குறைந்த விலையில் தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.