சேலம்
சேலம் கோர்ட்டில் 6 பேர் கொலை வழக்கு விசாரணை தொடக்கம்
|சேலம் கோர்ட்டில் 6 பேர் கொலை வழக்கு விசாரணை தொடங்கி உள்ளது.
சேலம்
சேலம் தாசநாயக்கன்பட்டி சேர்ந்தவர் குப்புராஜ். ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டரான இவர், கடந்த 2010-ம் ஆண்டு வீட்டில் இருந்தபோது, மனைவி சந்திரா, மகன் ரத்தினம் உள்பட குடும்பத்தினர் 6 பேருடன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். குப்புராஜின் மூத்த மகன் சிவகுரு, பேரன் கோகுல்நாத் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் சரண் அடைந்து சொத்து தகராறில் நாங்கள் தான் கொலை செய்தோம் என்று தெரிவித்தனர். இந்த வழக்கில் சேலம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக சிவகுருவின் மனைவி மாலா, மருமகன் ரஜினி, மகள் யுவபிரியா, கோகுல்நாத், செந்தில், சேகர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், 6 பேர் கொலை வழக்கு சேலம் 2-வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாட்சிகள் விசாரணை நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் முதல் புகார்தாரரான கிராம நிர்வாக அலுவலர் ராமசாமி, அவரின் உதவியாளர் மாணிக்கம் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதால் இருவரின் இறப்புக்கான சான்றிதழை சி.பி.சி.ஐ.டி போலீசார் கோர்ட்டில் அளித்தனர்.
இதேபோல், இந்த வழக்கில் தொடர்புடைய சிவகுரு, அவரின் மனைவி மாலா ஆகியோர் ஏற்கனவே உடல்நலம் பாதித்து இறந்துவிட்டனர். இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, அடுத்த விசாரணையை அடுத்த மாதம் 5-ந் தேதிக்கு தள்ளி வைத்தார். அன்று சாட்சிகள் விசாரணை தொடங்கும் என போலீசார் தெரிவித்தனர்.