சேலம்
சேலத்தில் புத்தக கண்காட்சி 20-ந் தேதி தொடங்குகிறது
|சேலத்தில் புத்தக கண்காட்சி 20-ந்தேதி தொடங்கி 30-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
சேலத்தில் புத்தக கண்காட்சி 20-ந்தேதி தொடங்கி 30-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
கண்காட்சி
சேலம் மாவட்டத்தில் புத்தக கண்காட்சி நடத்தப்படுவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் வருகிற 20-ந் தேதி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் புத்தக கண்காட்சி தொடங்கி 30-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று பயன்பெறவும், மாணவர்களை கண்காட்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சேலம் மாவட்ட பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
சிறப்பு ஏற்பாடுகள்
தொல்லியல் துறை மூலம் வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுகள், சிலைகள், நாணயங்கள் மற்றும் அரிய வகை புத்தகங்கள் உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. புத்தக கண்காட்சிக்கு வருபவர்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் அதன் கருப்பொருள் அடிப்படையில் வரிசைப்படுத்தி அமையும் வகையில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கண்காட்சியில் பங்கேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிக்குமார், முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.