சேலம்: ஆம்னி பஸ்-வேன் மோதி 6 பேர் உயிரிழந்த சோகம் - பஸ் டிரைவர் கைது
|ஆத்தூர் அருகே ஆம்னி பஸ்-வேன் மோதி 6 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பஸ் டிரைவரை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.
ஆத்தூர்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா புதுப்பேட்டை லீ பஜார் வக்கீல் கிட்டா முஸ்தபா தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். ஆட்டோ மெக்கானிக்கான இவர் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் இறந்தார்.
அவருக்கு 30-வது நாள் துக்கம் அனுசரிக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதையொட்டி நேற்று முன்தினமே அவரது வீட்டுக்கு உறவினர்கள் ஏராளமானவர்கள் வந்தனர்.
ஆறுமுகத்தின் வீட்டில் தூங்குவதற்கும், அமர்வதற்கும் போதிய இடவசதி இல்லாததால் பலர் வீட்டின் வெளிப்பகுதியில் இருந்தனர். அப்போது துக்க வீட்டுக்கு வந்த 11 பேர் நள்ளிரவு சுமார் 12.30 மணி அளவில் ஒரு வேனில் டீ குடிப்பதற்காக ஆத்தூர் புறவழிச்சாலைக்கு சென்றனர்.
வேனை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சி.எச்.பி. காலனியை சேர்ந்த டிரைவர் ராஜேஷ் (வயது 29) என்பவர் ஓட்டினார்.
வேன் ஆத்தூர் அருகே உள்ள துலுக்கனூர் கிராமம் ஒட்டம்பாறை என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி பஸ் வந்தது. கண்இமைக்கும் நேரத்தில் வேனும், ஆம்னி பஸ்சும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் பயங்கரமாக மோதின. இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் வேனை ஓட்டி வந்த டிரைவர் ராஜேஷ், அவரது தங்கை ரம்யா (25) மற்றும் புதுப்பேட்டை லீ பஜார் வக்கீல் கிட்டா முஸ்தபா தெருவை சேர்ந்த மயில்வாகனன் மகள் சந்தியா (23), சுதாகர் மனைவி சரண்யா (23), சந்தோஷ்குமார் மனைவி சுகன்யா (27) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் செல்லும் வழியில் சந்தோஷ்குமார் மகள் தன்ஷிகா என்ற 11 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் ஆத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்து குறித்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருந்தனர். விபத்து ஏற்பட்டதும் அங்கிருந்து ஆம்னி பஸ் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் தப்பி ஓடிய ஆம்னி பஸ் டிரைவர் முத்துச்சாமி(வயது 50) என்பவரை ஆத்தூர் போலீசார் இன்று காலை கைது செய்துள்ளனர். அவரிடம் விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.