சேலம்: ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் - வறுமையால் குழந்தைகளை மருத்துவமனையிலேயே விட்டுச் சென்ற பெற்றோர்....!
|ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகளை தங்களால் வளர்க்க முடியாது என்று கூறி மருத்துவமனையிலேயே பெற்றோர் விட்டுச்சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம்,
சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த அக்டோபர் மாதம் பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கடந்த 20-ம் தேதி ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. எடை குறைவாக பிறந்த இந்த மூன்று பெண் குழந்தைகளையும் வறுமையின் காரணமாக பராமரிக்க முடியாத நிலையில் தாங்களின் நிலை இருப்பதாக குழந்தைகளின் பெற்றோர் சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் வள்ளியிடம் தெரிவித்து, மருத்துவமனையிலேயே வைத்துக்கொள்ளுமாறு கூறி இருக்கிறார்கள்.
உடனே குழந்தைகளை பெறமறுத்த மருத்துவமனை முதல்வர் வள்ளி, பெற்றோரிடம் மருத்துவமனை முதல்வர் குழந்தைகளின் அருமை குறித்து தன்னால் முடிந்த அளவுக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். இருப்பினும் தங்களால் 3 குழந்தைகளையும் வளர்க்க முடியாது என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
தங்கள் குடும்ப சூழ்நிலையை அவரிடம் மீண்டும் பெற்றோர்கள் தெரிவிக்கவே, மருத்துவமனை நிர்வாகமும் குழந்தைகளை விட்டுச்செல்ல சம்மதித்தது. இதனை அடுத்து குழந்தையை அவர்கள் அங்கேயே விட்டுச் சென்றனர். இதனால் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக எடை குறைந்து பிறந்த குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்தன
இந்த நிலையில் 3 பெண் குழந்தைகளும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் சென்று குழந்தைகளை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரியிடம் 3 குழந்தைகளும் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த முறையில் குழந்தைகளை பராமரிக்கவும் அவர் அறிவுறுத்தினார்.