< Back
மாநில செய்திகள்
கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு களைகட்டிவரும் அகல் விளக்கு விற்பனை
மாநில செய்திகள்

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு களைகட்டிவரும் அகல் விளக்கு விற்பனை

தினத்தந்தி
|
1 Dec 2022 7:15 PM IST

சிறிய விளக்குகள் டஜன் 12 ரூபாய்க்கும், பெரிய விளக்குகள் ரகத்திற்கு ஏற்ப 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

உடுமலை,

தீப ஒளி திருநாளாம் திருக்கார்த்திகை தீபம் வருகிற டிசம்பர் 6-ந்தேதி கொண்டாடப்படுகிறது. வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள், கோவில்களில், மண் விளக்குளில் தீபம் ஏற்றி வழிபடுவது பாரம்பரியமாக நடந்து வருகிறது.

திருக்கார்த்திகைக்கு தேவையான தீபங்கள் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, புக்குளம், பூளவாடி, பள்ளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. தற்போது விளக்கு தயாரிப்பதற்கான மண் கிடைப்பதில் சிக்கல், தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களினால் உள்ளூர் தயாரிப்புகள் குறைந்து கேரள மாநிலம், பாலக்காடு பகுதியிலிருந்து, சிறிய வகை விளக்குகள் வரத்து காணப்படுகிறது.

திருக்கார்த்திகை நெருங்கி வரும் நிலையில் உடுமலையில், பல்வேறு இடங்களில் மண் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. கேரளாவிலிருந்து வந்துள்ள சிறிய விளக்குகள் டஜன் 12 ரூபாய்க்கும், பெரிய விளக்குகள் ரகத்திற்கு ஏற்ப 10 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

உள்ளூர்களில் பெரிய விளக்குகள் அதிக அளவு தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. கோவில்களுக்கும், தீப கம்பங்களுக்கும், ஒரு லிட்டர் முதல் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட விளக்குகளும் விற்பனைக்கு வந்துள்ளன. பெரிய விளக்குகள் 150 ரூபாய் வரை விற்கிறது. மேலும் பல்வேறு வடிவங்களிலும் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.

புதிதாக விநாயகர் சிலையுடன் கூடிய ஐந்து முக மண் விளக்கு விற்பனைக்கு வந்துள்ளது. முழுவதும் மண்ணால் செய்யப்பட்டு இயற்கை சாயம் பூசப்பட்டுள்ளது. இந்த விளக்கு 50 முதல் 100 ரூபாய் வரை விற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச்செல்கின்றனர்.

மேலும் செய்திகள்