வாட்டர் கேன் மற்றும் பழங்கள் விற்பனை: சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு
|சென்னையில் கேன் வாட்டர் தரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
சென்னை தேனாம்பேட்டையில் சுகாதாரத்துறை துணை இயக்குனர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். குறிப்பாக கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் கேன் வாட்டர் தரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கவேண்டும் என்றும், பழங்கள் செயற்கை முறையில் பழுக்கவைப்பதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் வியாபாரிகளை தொடர்ந்து கண்காணிக்கவேண்டும் எனவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல, குளிர்பானங்கள் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்பதை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், குட்கா, பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனையை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அதிரடி ரெய்டுகளை நடத்தவேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.