< Back
மாநில செய்திகள்
ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை -அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை -அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி

தினத்தந்தி
|
29 Jun 2023 5:57 AM IST

விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

சென்னை,

தமிழகத்தில் தக்காளி விலை திடீரென உயர்ந்து உள்ளது.

சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பசுமை பண்ணை கடைகளில்...

இந்த திடீர் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் நேற்று முதல் தக்காளியை கொள்முதல் விலைக்கே விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனை பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி சென்று வருகிறார்கள். இதர காய்கறி விலையும் குறைவாக இருப்பதால் பண்ணை பசுமை கடைகளில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தமிழக அரசின் நடவடிக்கையை பாராட்டியும் வருகிறார்கள்.

அமைச்சர் ஆய்வு

இதற்கிடையில் சென்னை திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் கீழ் தேனாம்பேட்டையில் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடையை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று ஆய்வு செய்தார். காய்கறி வரத்து, இருப்பு உள்ளிட்ட விவரங்களை பணியாளர்களிடம் அவர் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து அமைச்சர் பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வரத்து குறைவு

தமிழ்நாட்டில் தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கோடையில் கடும் வெப்பம் நிலவியதால் விவசாயிகள் தக்காளி பயிரிடுவது கணிசமாக குறைந்ததாலும், அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும் கடந்த வாரம் முதல் தக்காளி விலை அதிகரித்துள்ளது.

தோராயமாக நாள் ஒன்றுக்கு சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்கு 800 டன் வரையில் வரக்கூடிய தக்காளி வரத்து தற்போது 300 டன் என்ற அளவில் குறைந்துள்ளது. இதனால் வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரூ.60-க்கு விற்பனை

இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கூட்டுறவுத்துறையின் மூலம் தமிழகத்தில் செயல்பட்டு வரும் 62 பண்ணை பசுமை நுகர்வோர் பசுமை கடைகள், 3 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் இன்று (நேற்று) முதல் குறைந்தபட்சமாக தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.60 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் கீழ் தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ராஜாஅண்ணாமலைபுரம், கீழ்ப்பாக்கம், பெரியார்நகர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், அம்மா உணவத்திற்கும் தனியாக தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகள் மூலமாக...

இந்த தற்காலிகமான தக்காளி விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டவிரோதமாக தக்காளியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிகை விடப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் தமிழ்நாட்டில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூலம் தக்காளி விற்பனையை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் தக்காளி வாங்கி பயன் அடையலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோயம்பேட்டில் விலை குறைந்தது

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனையான நிலையில், சில்லரை விற்பனையில் ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதற்கிடையில் கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை நேற்று கொஞ்சம் குறைந்தது.

இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் காய் கனி மலர் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் எம்.தியாகராஜன் கூறியதாவது:-

வழக்கமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 800 டன் அளவில் தக்காளி வரத்து இருக்கும். ஆனால் தற்போது அண்டை மாநிலங்களில் விளைச்சல் பாதிக்கப்பட்டதின் எதிரொலியாக 350 டன் வரையில் மட்டுமே தக்காளி கொண்டுவரப்படுகிறது. இதனால் மொத்த விலையிலேயே தக்காளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து சற்று அதிகரித்ததன் எதிரொலியாக தக்காளி விலை ரூ.10 குறைந்து நேற்று ரூ.70-க்கு விற்பனையானது.

இவ்வாறு அவர் கூறினார்.

இருப்பினும் சில்லரை விற்பனை கடைகளில் தக்காளியின் விலை குறையவே இல்லை. சில பல்பொருள் அங்காடிகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.110 வரை விற்பனை ஆகிறது.

மேலும் செய்திகள்