காலாவதி தேதி குறிப்பிடாமல் குளிர்பானங்கள் விற்பனை: சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்திற்கு நோட்டீஸ்
|காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த உணவு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம்,
சேலம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள், புறநோயாளிகள் என சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்த மருத்துவமனை வளாகத்தில் ஆவின் பாலகம் இயங்கி வருகிறது. இங்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குளிர்பான பானங்கள், 50-க்கும் மேற்பட்ட பிரட் பாக்கெட்டுகள் தேநீர், காபி தயாரிப்பதற்காக பிரீசரில் முறையான பராமரிப்பின்றி வைக்கப்பட்டிருந்த 10 லிட்டருக்கும் மேலான பால் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட உணவு பொருட்களின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வந்த பிறகு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விளக்கமளிக்க ஆவின் பாலகத்திற்கு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில் சேலம் ஆவின் நிர்வாகத்தின் சார்பாக பொது மேலாளர் விஜய்பாபு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சேலம் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ஆவின் பாலகத்தின் உரிமையாளர் விக்னேஷ் என்பவருக்கு இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அதில் ஆவின் பாலகத்தில் ஆவின் பொருட்கள் அல்லாத மற்ற பொருட்களின் விற்பனையை மேற்கொண்டு ஆவின் ஒன்றிய விதிகளை மீறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 7 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்காவிட்டால் ஆவின் பாலகத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.