புதுக்கோட்டை
பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை
|பக்ரீத் பண்டிகையையொட்டி லட்சக்கணக்கான ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன.
முஸ்லிம்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை வருகிற 10-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிறப்பு தொழுகை நடத்துவார்கள். குர்பானி எனப்படும் இறைச்சி ஏழைகள், நண்பர்களுக்கு கொடுப்பது வழக்கம். மேலும் பிரியாணி சமையலும் உண்டு. அன்றைய தினம் இறைச்சி கடைகளிலும் ஆட்டிறைச்சி விற்பனை அமோகமாக நடைபெறும். இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையையொட்டி புதுக்கோட்டை சந்தைபேட்டையில் நேற்று ஆட்டு சந்தையில் ஆடுகள் வியாபாரம் களை கட்டியது. இறைச்சிக்கடைக்காரர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் ஆடுகளை வாங்க சந்தைக்கு திரண்டனர். மேலும் விற்பனையாளர்களும் ஆடுகளை அதிகம் கொண்டு வந்திருந்தனர். இதில் பல லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது. வருகிற 8-ந் தேதி நடைபெற உள்ள சந்தையிலும் ஆடுகள் விற்பனை களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுக்கோட்டை சந்தைபேட்டையில் வாரத்தில் வெள்ளிக்கிழமை தோறும் ஆட்டு சந்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.