செங்கல்பட்டில் வாட்ஸ்அப்- மூலம் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது
|செங்கல்பட்டில் வாட்ஸ்அப்- மூலம் கஞ்சா விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம், திருமணி காட்டுப்பகுதி வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கிய செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது இரண்டு கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் செங்கல்பட்டு அடுத்த மையூர் பகுதியைச் சேர்ந்த அமல்ராஜ் (வயது 20) என்பது தெரியவந்தது.
மேலும் இவர் வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும், மேலமையூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் (20) என்பவரிடமிருந்து கஞ்சாவை வாங்கி வருவதும் தெரியவந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.