திருவண்ணாமலை
நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சார்பில் பட்டாசு விற்பனை
|திருவண்ணாமலையில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சார்பில் பட்டாசு விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் சார்பில் திருவண்ணாமலை டவுன் புகழ் திரையரங்கம் எதிரில் பட்டாசு விற்பனை இன்று தொடங்கியது.
இதன் தொடக்க நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பட்டாசுக்களை பார்வையிட்டு விற்பனையை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், இங்கு ரூ.50 லட்சம் அளவிற்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ள ஸ்டேண்டர்டு, இரட்டை கிளி ஆகிய தரமுள்ள நிறுவனங்களின் பட்டாசுக்கள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது.
பொதுமக்களின் நலன் கருதி கிப்ட் பாக்ஸ் ரூ.705 முதல் ரூ.1745 மதிப்பு வரை விற்பனைக்கு உள்ளது.
பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றியும், அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படியும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடித்தல் தொடர்பான அறிவுரைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மண்டல இணைப்பதிவாளர் நடராஜன், துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) ஆரோக்கியராஜ், கூட்டுறவு துறை பணியாளர்கள் மேலாண்மை இயக்குனர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் இயக்குனர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.