திருச்சி
புனித சவேரியார் ஆலய தேர்பவனி
|புனித சவேரியார் ஆலய தேர்பவனி நடந்தது.
கல்லக்குடி:
புள்ளம்பாடி ஒன்றியம், திண்ணகுளம் கிராமத்தில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் மே மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழாவையொட்டி கடந்த 20-ந் தேதி திருச்சி டோல்கேட்டில் உள்ள குழந்தை இயேசு ஆலயத்தில் இருந்து இளைஞர்களால் தொடர் ஓட்டமாக தீபம் எடுத்து வரப்பட்டு, ஆலயத்தில் பொங்கல் வைத்து கொடியேற்றம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தினமும் ஆலயத்தில் நவநாள் கூட்டுப்பாடற் திருப்பலி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு புனித சவேரியார், புனித வனத்து சின்னப்பர், மாதா சொரூபம் தாங்கிய பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது.
தேர்பவனியை விரகாலூர் பங்குத்தந்தை ஹென்றிபுஷ்பராஜ் புனிதப்படுத்தி தொடங்கி வைத்தார். அதிர்வேட்டுகள் முழங்க கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர், அதிகாலையில் ஆலயத்தை வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து நேற்று ஆலயத்தில் தொன்போஸ்கோ மாணவர் இல்ல இணை இயக்குனர் அருட்தந்தை பிரான்சிஸ்அமலதாஸ் மற்றும் கன்னியர்கள் தலைமையில் சிறப்பு கூட்டுபாடற் திருப்பலி நடைபெற்றது. இரவில் இளைஞர்கள் சார்பில் சப்பர பவனி நடைபெற்றது. விழாவில் திண்ணகுளம், விரகாலூர், தனவளநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து இறை மக்கள், கிராம மக்கள் கலந்து கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், இறைமக்கள் செய்திருந்தனர். இன்று(செவ்வாய்க்கிழமை) கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.