< Back
மாநில செய்திகள்
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி விரிபுகழ் விண்ணுயர்ந்து நிற்கும் - வைகோ அறிக்கை
மாநில செய்திகள்

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி விரிபுகழ் விண்ணுயர்ந்து நிற்கும் - வைகோ அறிக்கை

தினத்தந்தி
|
4 Sept 2022 11:26 PM IST

வ.உ.சி போன்ற தலைவர்கள் போராடி பெற்ற விடுதலையை பாசிச சக்திகள் சிதைப்பதை அனுமதிக்க கூடாது என்று வைகோ கூறியுள்ளார்.

சென்னை,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், தென்னாட்டுத் திலகர், கன்னித் தமிழ் வளர்த்த கவிஞர் என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரனார் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் என்னும் சிற்றூரில் உலகநாதன், பரமாயி அம்மையாருக்கும் 1872 - ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் பிறந்தார்.

ஒட்டப்பிடாரத்தில் பள்ளிப் படிப்பையும், தூத்துக்குடி புனித சேவியர் பள்ளியில் உயர்நிலை கல்வியையும், திருநெல்வேலி இந்து கல்லூரியில் பட்டப் படிப்பையும் முடித்தார். பின்னர் திருச்சியில் சட்டம் பயின்று 1895இல் ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழில் தொடங்கினார். வழக்கறிஞர் தொழிலில் உயர்ந்து விளங்கினாலும், நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப் பட்டு கிடப்பது பற்றியே அவரது சிந்தை முழுவதும் நிரம்பி இருந்தது.

1908ஆம் ஆண்டு நடந்த கோரல் நூற்பாலை நிறுவனத்தின் தொழிலாளிகள் முன்னெடுத்த 9 நாள் வேலை நிறுத்தம், ஆங்கிலேயர்களை நிலைகுலைய செய்தது. 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது, மிகக் குறைந்த கூலி தருவது, விடுமுறை நாட்கள் தடுப்பது போன்ற பல தொழிலாளர் விரோத செயல்கள் கோரல் ஆலையில் நடைபெற்றன. உச்ச கட்டமாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை வாங்கப்பட்டு, தொழிலாளர்கள் உழைப்பு சுரண்டப்பட்டது. கையில் கைரேகை பார்க்க இயலும் காலை நேரம் முதல், மாலை நேரம் வரை நூற்பாலை ஓட்டியதால் 'ரேகை பார்த்து ஓட்டுதல்' என்றே இந்த கொடுமை அழைக்கப்பட்டது. இவற்றை எதிர்த்து தொழிலாளர்களைத் திரட்டி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார் வ.உ.சி.

9 நாள் நடைபெற்ற போராட்டத்தில் பெரிய நிதி திரட்டி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அளித்ததன் காரணத்தினால், அந்த வேலை நிறுத்தத்தின் வீரியம் குறையாமல் பார்த்துக் கொண்டார். வேலைநிறுத்தத்தினை தடுக்க இயலாத ஆங்கிலேய அரசு போராட்டத்தின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது.

இந்தியாவின் செல்வ வளங்களை கொள்ளையடிக்கும் ஆங்கிலேய அரசை எதிர்த்து பேசத்தொடங்கிய வ.உ.சி. அவர்கள், 'பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி' என்ற ஆங்கிலேய கப்பல் சரக்கு மற்றும் போக்குவரத்து நிறுவனத்தை எதிர்த்து 'சுதேசி நாவாய்ச் சங்கம்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் மூலம் 2 கப்பல்களை வாங்கி இலங்கை இந்தியா இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்கினார். இது ஆங்கிலேய அரசுக்கு பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து ஆங்கிலேய அரசால் வ.உ.சி. மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது. அவரது கப்பல் நிறுவனம் முடக்கப்பட்டது. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறையில் கொடுமையான தண்டனையாக மாடுகளால் இழுக்கப்படும் செக்கு ஒன்றை தனி மனிதராக இழுக்க வேண்டும் என்று கொடுமை படுத்தப்பட்டார்.

சிறை மீண்ட வ.உ.சி தமிழ் இலக்கிய உலகத்திற்கு தன்னை அர்ப்பணித்தார். நீதிக்கட்சியின் சமூகநீதி கொள்கையை ஆதரித்த வ.உ.சி அவர்கள் தந்தை பெரியாரின் இலட்சிய தோழராகவும் விளங்கினார்.

வீரத்தமிழர் வ.உ.சி. புகழ் கொடி விண்முட்ட என்றும் பறக்கும். தியாகத் தழும்புகளை பெற்ற வ.உ.சி போன்ற தலைவர்கள் போராடி பெற்ற விடுதலையை பாசிச சக்திகள் சிதைப்பதை அனுமதிக்க கூடாது. வ.உ.சி யின் 151 ஆவது பிறந்த நாளில் அதற்கான உறுதியை எடுப்போம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்