திருவாரூர்
2-வது நாளாக சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை
|முத்துப்பேட்டை பகுதியில் நேற்று 2-வது நாளாக போலீசார் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். அலையாத்தி காட்டிற்கு படகில் சென்று போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
பாதுகாப்பு ஒத்திகை
இந்திய கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி, தாக்குதல் நடத்துவதை தடுக்கும் பொருட்டு, கடலோர கிராமங்களில் அரசு சார்பில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் சரியாக நடக்கிறதா? என்பதை பரிசோதிக்கும் வகையில், இந்திய கடலோர காவல் படையினர், தமிழக மரைன் போலீசார் மற்றும் மாநில போலீசார் சாகர் கவாச் ஆப்ரேஷன் என்ற பேரில் தமிழகத்தில் கடலோர பகுதியில் 2 நாட்கள் பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. .
போலீஸ் பாதுகாப்பு
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, ஜாம்புவானோடை, செங்காங்காடு, தில்லைவிளாகம், இடும்பாவனம், தொண்டியக்காடு, பேட்டை, தம்பிக்கோட்டை கிழக்காடு உள்பட பல பகுதியில் சாகர் கவாச் ஆப்ரேஷன் பாதுகாப்பு ஒத்திகை நேற்று 2-வது நாளாக நடைபெற்றது. இதையொட்டி இடும்பாவனம், தில்லைவிளாகம், கோபாலசமுத்திரம், தம்பிக்கோட்டை கீழக்காடு, பேட்டை உள்ளிட்ட பகுதியில் உள்ள போலீஸ் சோதனை சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் சிறப்பு வாகன ரோந்தில் ஈடுபட்டனர். இதனை திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மேற்பார்வையில் முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) தமிழ்மாறன், சட்ட ஒழுங்கு துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்து பார்வையிட்டனர்.
படகில் சென்று ஆய்வு
முன்னதாக முத்துப்பேட்டை கடலையொட்டி அமைந்துள்ள அலையாத்திகாடு மற்றும் லகூன் பகுதியில் முத்துப்பேட்டை கடலோர காவல்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி தலைமையில் கடலோர காவல்படை போலீசார் படகில் சென்று மீனவர்கள் படகு சுற்றுலா பயணிகள் செல்லும் படகுகள் மற்றும் படகுதுறை, காட்டில் உள்ள சுற்றுலா பயணிகள் தங்கும் பகுதியில் தீவிரவாதிகள் சமூக விரோதிகள் யாரும் இருகிறார்களா? என்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்று திருவாரூர் போலீஸ்சூப்பிரண்டு சுரேஷ்குமார், கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், வனசரக அலுவலர் ஜனனி கடலோர காவல் படை சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி உள்ளிட்ட போலீசார் படகு மூலம் அலையாத்திகாட்டிற்கு சென்று அங்கு டிரோன் அனுப்பி ஆய்வு செய்தனர்.