செங்கல்பட்டு
திருக்கழுக்குன்றத்தில் எம்.ஜி.ஆர் சிலையின் கையில் காவி துணியை கட்டியதால் பரபரப்பு
|திருக்கழுக்குன்றத்தில் எம்.ஜி.ஆர் சிலையின் கையில் மர்ம நபர்கள் காவி துணியை கட்டியதால் அங்கு பரபரப்பு நிலவியது.
எம்.ஜி.ஆர் சிலையில் காவி துண்டு
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மார்க்கெட் பகுதி அறிஞர் அண்ணா பூங்கா உள்ளது. பூங்காவில் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர் உருவ சிலை உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் அண்ணா பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆர். உருவ சிலை கையில் காவி துணியை கட்டி விட்டு சென்றனர். அந்த வழியாக சென்ற அ.தி.மு.க. தொண்டர்கள் தற்செயலாக எம்.ஜி.ஆர் சிலையை பார்த்தபோது கையில் காவி துணியை கட்டி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கட்சி தொண்டர்கள் திருக்கழுக்குன்றம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் தினேஷ்குமார்க்கு தகவல் தெரிவித்தனர்.
பரபரப்பு
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அ.தி.மு.க. செயலாளர் தினேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று எம்.ஜி.ஆர். சிலையில் கட்டப்பட்டிருந்த காவி துணியை அகற்றினர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இரவு நேரத்தில் மர்ம நபர்கள் எம்.ஜி.ஆர். சிலை கையில் காவி துணியை கட்டி விட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே கடந்த மாதம் திருப்போரூா் பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மர்ம நபர்கள் காவி துணியை அணிவித்தது நினைவுகூறத்தக்கது.