பாலங்கள் போன்ற கட்டமைப்புகள் விபத்துக்குள்ளாவதை தடுக்க பாதுகாப்பு புரோட்டோக்கால்கள் உருவாக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
|பாலங்கள் போன்ற கட்டமைப்புகள் விபத்துக்குள்ளாவதை தடுக்க பாதுகாப்பு புரோட்டோக்கால்கள் உருவாக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பாலங்கள் போன்ற கட்டமைப்புகள் இடிந்து விபத்துக்குள்ளாவதை தடுப்பதற்கான பாதுகாப்பு புரோட்டோக்கால்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மாச்சு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் 130-க்கும் மேற்பட்டோர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மார்ச் மாதம் முதல் 7 மாதங்கள் நடைபெற்ற பராமரிப்பு பணிகளுக்குப் பிறகு கடந்த 26-ஆம் தேதி தான் பாலம் மீண்டும் திறக்கப்பட்டது. அடுத்த 4 நாட்களில் விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பாலங்கள் போன்ற கட்டமைப்புகள் இடிந்து விபத்துக்குள்ளாவதை தடுப்பதற்கான பாதுகாப்பு புரோட்டோக்கால்கள் உருவாக்கப்படுவதையும், அவை முழுமையாக கடைபிடிக்கப்படுவதையும் மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்!" என்று கூறியுள்ளார்.