திருப்பதி மலைப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு - தேவஸ்தானத்தலைவர் தகவல்
|‘திருப்பதி மலைப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீசார் மற்றும் வனத்துறையினர் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது' என்று தேவஸ்தானத் தலைவர் பி.கருணாகர ரெட்டி சென்னையில் கூறினார்.
சென்னை,
திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் உள்ளூர் ஆலோசனைக்குழுத் தலைவராக 3-வது முறையாக தொழில் அதிபர் ஏ.ஜெ.சேகர்ரெட்டி நியமிக்கப்பட்டார். அவருக்கு, சென்னை, தியாகராயர் நகரில் உள்ள வெங்கடேசுவர பெருமாள் கோவிலில் சுவாமி- தாயார் சன்னதியில், திருமலை- திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர்கள் குழுத்தலைவர் பி.கருணாகர ரெட்டி நேற்று பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
விழாவில் தியாகராயநகரில் புதிய கோவில் கட்டுவதற்காக, டி.வி.எச். என்ற தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் ரூ.1 கோடிக்கான காசோலை நன்கொடையாக வழங்கப்பட்டது. தொடர்ந்து உளுந்தூர்பேட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் வெங்கடேச பெருமாள் கோவிலின் புகைப்படமும் வெளியிடப்பட்டது.
பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பு
பின்னர் பி.கருணாகரரெட்டி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் நலன் கருதி வேலூரில் இருந்து திருப்பதி மற்றும் சென்னையில் இருந்து செல்லும் பக்தர்கள் நலன் கருதி பெரியபாளையத்தில் இருந்து திருப்பதி வரை 25 கிலோ மீட்டருக்கு ஒரு தங்கும் விடுதி கட்டப்படுகிறது. இதில் 150 பக்தர்கள் தங்கும் வகையில் சமையல் அறை, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்படுகிறது.
சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் திருமலைக்கு நடைபாதையாக செல்லும் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வலை மற்றும் கூண்டு அமைத்து 6 சிறுத்தைகள் பிடிக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து சிறுத்தைகளை பிடிக்க வலை அமைக்கப்பட்டு உள்ளது. 170 வனத்துறையினர் சிறுத்தைகளை இருக்கும் இடத்தை தேடி வருகின்றனர். எனவே குழந்தைகளுடன் வருபவர்கள் பகல் 2 மணிக்கும், பெரியவர்கள் இரவு 10 மணி வரையும் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீசார் மற்றும் வனத்துறையினர் மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. பக்தர்கள் தைரியமாக பாதயாத்திரையாக செல்லலாம்.
நடந்து செல்லும் பகுதிகளை கூண்டு போல் அமைக்கவும் பரிசீலனை நடந்து வருகிறது. சிறுத்தையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவஸ்தானம் சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது புதிய நீதிக்கட்சி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், முன்னாள் கமிட்டி உறுப்பினர்கள் பி.வி.ஆர்.கிருஷ்ணராவ், மோகன்ராவ், கார்த்திகேயன், அனில் ரெட்டி உள்ளிட்ட பலர் இருந்தனர்.