கிருஷ்ணகிரி
ஓசூர் பகுதியில்கனமழைக்கு பசுமை குடில்கள் சேதம்மலர் சாகுபடியாளர்கள் கவலை
|ஓசூர்:
ஓசூர் பகுதியில் கனமழை காரணமாக பசுமை குடில்கள் சேதமடைந்துள்ளதால் மலர் சாகுபடியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
விலை வீழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், பேரிகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் ரோஜா மற்றும் கொய்மலர்கள், குடைமிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றை பசுமை குடில்கள் அமைத்தும், திறந்த வெளியிலும் பயிரிட்டு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் 40 வகைக்கும் மேற்பட்ட ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. உள்ளூர் சந்தைகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வந்தன..
இந்த நிலையில் சமீபகாலமாக ரோஜா செடிகளில் நோய் தாக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் மார்க்கெட்டில் ரோஜா மலர்கள் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
நிவாரணம்
இதற்கிடையே கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஓசூர் பகுதியில் பலத்த மழையும், சூளகிரி பகுதியில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. இதன் காரணமாக ஓசூர் அருகே பாகலூர், சேவகானபள்ளி போன்ற இடங்களில் சுமார் 30 ஏக்கருக்கும் மேல் பசுமை குடில்கள் சேதமடைந்துள்ளன.
இதனால் சுமார் 3 கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மலர் சாகுபடியாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர். இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாபு என்ற வெங்கடாசலம் கூறுகையில், பசுமைக்குடில்கள் சேதமடைந்த இடங்களில் முறையாக சர்வே செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.