< Back
மாநில செய்திகள்
கலெக்டரின் ஆய்வுக்கூட்டத்தை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் புறக்கணிப்பு
அரியலூர்
மாநில செய்திகள்

கலெக்டரின் ஆய்வுக்கூட்டத்தை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் புறக்கணிப்பு

தினத்தந்தி
|
30 Aug 2022 6:40 PM GMT

கலெக்டரின் ஆய்வுக்கூட்டத்தை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் புறக்கணித்தனர்.

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால் இந்த ஆய்வுக்கூட்டத்தை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் புறக்கணித்தனர். ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர் குருநாதன் மற்றும் பொறியாளர் சித்ரா ஆகியோரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், ஊரக வளர்ச்சி துறையில் பணிபுரியும் பல்வேறு நிலை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 17(அ), 17(ஆ) குற்றச்சாட்டு குறிப்பாணைகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணிப்பதிவேட்டில் கையொப்பமிட அனுமதிக்காததை கண்டித்தும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு இந்த மாத ஊதிய பட்டியல் அனுப்பாததை கண்டித்தும், மாவட்ட கலெக்டரின் ஆய்வுக் கூட்டத்தில் மயங்கி விழுந்ததற்காக பணி விடுவிப்பு செய்யப்பட்டுள்ள மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரனுக்கு மீண்டும் அதே பணியிடத்தில் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு முடிவின்படி, நேற்று மாவட்ட கலெக்டரின் ஆய்வுக் கூட்டத்தை புறக்கணித்ததாக கூறப்பட்டது. இதனால் கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் பங்கேற்க வராததால், இந்த கூட்டம் நடைபெறவில்லை.

மேலும் மேற்படி கோரிக்கைகளை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் ஏற்கனவே செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற செப்டம்பர் 14-ந் தேதி அன்று மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும், அப்போதும் அக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், 28-ந் தேதியன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட மையத்தின் சார்பில் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்