9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு - வரும் 26-ம் தேதி முதல் விண்ணபிக்கலாம்..
|கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அரசு பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஊரக திறனாய்வு தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சேலம்:
கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அரசு பள்ளிகள், அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்குவதற்கான ஊரக திறனாய்வு தேர்வு அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளி யிடப்பட்டுள்ளது.
இந்த தேர்வு வருகிற டிசம்பர் மாதம் 10-ந்தேதி நடத்தப்பட உள்ளது. நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது. உதவித் தொகை பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவர்கள் வருகிற 26-ம் தேதி முதல் நவம்பர் மாதம் 5-ந்தேதி வரை தலைமை ஆசிரியர் வழியே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பபடிவங்களை தமிழக அரசின் தேர்வுகள் இயக்ககம் இணையதளத்தில் இருந்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பெற்றோரின் வருவாய் சான்றிதழையும் இணைக்க வேண்டும். மாணவர்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்களை வருகிற 28-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 8-ந்தேதி வரை ஆன்லைனில் தலைமை ஆசிரியர்கள் பதிவேற்ற வேண்டும்.
இந்த தகவலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் துறை இயக்குநர் சேதுராம வர்மா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.