மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம்: மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தச்சுத்தொழிலாளி தற்கொலை
|மனைவி வேறு ஒருவருடன் ஓட்டம் பிடித்ததால் மனமுடைந்த தச்சுத்தொழிலாளி மோகன் மனமுடைந்தார்.
சென்னை,
மனைவி கள்ளக்காதலனுடன் ஓடிபோனதால் வேதனை அடைந்த தச்சுத்தொழிலாளி, 5 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி அடுத்த சென்னீர்க்குப்பம் வாணியர் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 32). தச்சுத்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவரது மனைவி பரிமளா (28). இந்த தம்பதியினருக்கு நட்சத்திரா (5) என்ற மகள் இருந்தார். பரிமளாவுக்கு அவரது உறவினர் ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையறிந்த மோகன் மனைவி பரிமளாவை கண்டித்ததாக தெரிகிறது.
ஆனால் மோகனுடன் தொடர்ந்து வாழ விரும்பாத பரிமளா, தனது மகள் நட்சத்திராவுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்ததாக தெரிகிறது.இதையறிந்த மோகன் மனைவி வசிக்கும் இடத்துக்கு சென்று பரிமளாவிடம் வாக்குவாதம் செய்த நிலையில், அவர்களிடமிருந்து குழந்தை நட்சத்திராவை தன்னுடன் அனுப்புமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து பரிமளா மகள் நட்சத்திராவை கணவர் மோகனுடன் அனுப்பி வைத்தார். எனினும் மனைவி வேறு ஒருவருடன் ஓட்டம் பிடித்ததால் மனமுடைந்த மோகன், குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது, உணவில் விஷம் கலந்து மகள் நட்சத்திராவுக்கு மோகன் சாப்பிட கொடுத்தார். அதை உண்ட குழந்தை சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தது. பின்னர் மோகன் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் வீட்டிலிருந்து மோகனும், அவரது மகளும் வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, குழந்தை நட்சத்திரா வாயில் நுரை தள்ளியபடியும், மோகன் தூக்குப்போட்டு இறந்த நிலையில் கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து தந்தை, மகள் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மனைவி கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்ததால் மனமுடைந்த கணவர் மகளுக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை கண்கலங்கச்செய்தது. தாயின் தகாத உறவு ஒரு குடும்பத்தை சிதைத்த பரிதாபம் அப்பகுதியில் அரங்கேறியது பரிதாபத்தை ஏற்படுத்தியது.