கன்னியாகுமரி
குலசேகரம் அருகே ரப்பர் பால்வெட்டும் தொழிலாளி அடித்துக்கொலையா? போலீசார் விசாரணை
|குலசேகரம் அருகே ரப்பர் பால்வெட்டும் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குலசேகரம்:
குலசேகரம் அருகே ரப்பர் பால்வெட்டும் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரப்பர் பால்வெட்டும் தொழிலாளி
குலசேகரம் அருகே உள்ள மணலோடை அன்பு நகர் குடியிருப்பை சேர்ந்தவர் தேவதாஸ் (வயது 63), ரப்பர் பால்வெட்டும் தொழிலாளி. இவருக்கு சுசீலா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.தேவதாசுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இவர் கேரளாவில் கடந்த சில மாதங்களாக ரப்பர் பால்வெட்டும் வேலை செய்து வந்தார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கடந்த 23-ந் தேதி ஊருக்கு திரும்பினார்.
அடித்துக்கொலையா?
இந்த நிலையில் தேவதாஸ் கடந்த 24-ந் தேதி நண்பர்களை பார்த்து வருவதாக கூறிவிட்டு, ரூ.2,500 ஐ எடுத்துக்கொண்டு சென்றார். அதன்பிறகு அவர் 26-ந் தேதி வீடு திரும்பினார். அப்போது உடல் சோர்ந்து மிகவும் பலவீனமாக காணப்பட்டார். மேலும் அவரிடம் ரூ.180 மட்டுமே இருந்தது. பணம் எங்கே என்று சுசீலா கேட்டார்.
அப்போது தன்னை சிலர் அடித்ததாக கூறினார். இதனால் பதறிப்போன சுசீலா அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் தேவதாசை குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தார். அங்கு அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று முன்தினம் தேவதாஸ் பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இதுபற்றி சுசீலா குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து தேவதாஸ் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.