< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
சுடுகாட்டை இடம்மாற்றம் செய்யக்கோரி ஆர்.டி.ஒ. அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
|17 Oct 2023 2:28 PM IST
பொன்னேரி அருகே சுடுகாட்டை இடம்மாற்றம் செய்யக்கோரி ஆர்.டி.ஒ. அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
பொன்னேரி அடுத்த மெதூர் ஊராட்சியில் அடங்கியது காவல்பட்டி கிராமம். இங்கு பொதுமக்கள் வாழும் பகுதி அருகே சுடுகாடு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இறந்த ஒருவரின் உடலை எரிக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை பெண்கள் உட்பட பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனையடுத்து மெதூர் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் மற்றும் பொதுமக்கள் பலர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காவல்பட்டி காலனி பகுதியில் உள்ள சுடுகாட்டை இடமாற்றம் செய்யக்கோரி மனு அளித்தனர். இதனால் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.