காஞ்சிபுரம்
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலம்
|செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. இதற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. சென்னை ஜகோர்ட்டு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் நேற்று சென்னை உள்பட 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் முடிவு செய்தது. தாம்பரம், மாம்பலம், மேடவாக்கம் பகுதியை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். சார்பில் சென்னை அருகே ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இருந்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நேற்று மாலை தொடங்கியது.
ஊர்வலத்தை இந்து பறையர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஆர்.ஜி.ராஜசேகர் கொடியசைத்து தொடக்கி வைத்தார். ஊர்வலம் ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை வழியாக அய்யஞ்சேரி பிரதான சாலை முத்துவேல் நகர் வழியாக 2½ கிலோமீட்டர் ஊர்வலமாக சென்று மீண்டும் தனியார்பள்ளியில் முடிவடைந்தது.
மலர் தூவி வரவேற்பு
இந்த ஊர்வலத்தில் ஏராளமான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 1000-க்கும் மேற்பட்டோர் சீருடை அணிந்தும், பேண்டு வாத்தியம் இசைத்தபடியும் மிடுக்குடன் நடந்து சென்றனர். ஊர்வலத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட பாரத மாதா உருவ படத்துடன் கூடிய வாகனமும் உடன் சென்றது. ஊர்வலமாக சென்ற பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மீது பெண்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். பின்னர் ஆர்.எஸ்.எஸ் பொதுக்கூட்டம் தனியார் பள்ளி வளாகத்தில் வி.எஸ்.ரவீந்தர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக விவேகானந்தன் கலந்து கொண்டு பேசினார். ஊரப்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொது கூட்டத்தை முன்னிட்டு ஊரப்பாக்கம் பகுதியில் 640 போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு
இதேபோல செங்கல்பட்டு வேதாச்சலம் நகர் பகுதியில் உள்ள ராமர் கோவிலில் இருந்து தொடங்கிய ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் ஜி.எஸ்.டி. சாலை, ராட்டிணங்கிணறு வழியாக சென்று அண்ணா நகரில் உள்ள விவேகானந்தா பள்ளியில் நிறைவடைந்தது.
இதில் 300-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலமானது காஞ்சீபுரம் காந்திரோடு பெரியார்தூண் பகுதியில் ஸ்ரீ ல ஸ்ரீ அனுமன் மாதாஜியால் தொடங்கி வைக்கப்பட்டது.
ஊர்வலத்தையொட்டி காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலம் காந்திரோடு வழியாக பஸ் நிலையம், சங்குசாபேட்டை வழியாக மீண்டும் காந்திரோட்டை வந்தடைந்தது.