ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு தடை: சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தமிழக அரசு அறிவிப்பு
|ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அக்டோபர் 2-ந்தேதி நடத்த இருந்த ஊர்வலத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. திருமாவளவனின் மனிதசங்கிலி போராட்டத்துக்கும் அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் 51 இடங்களில் அக்டோபர் 2-ந்தேதியன்று அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் திட்டமிட்டிருந்தனர்.
ஊர்வலம்
75-வது சுதந்திர தின விழா, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு விழா, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு நடைபெற உள்ள இந்த ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளையும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
முன்னதாக ஊர்வலத்துக்கு அனுமதி கோரி அந்தந்த மாவட்ட போலீசாரிடமும், டி.ஜி.பி. உள்ளிட்டோரிடமும் முறைப்படி மனு அளித்தனர். ஆனால் போலீசார் அனுமதி அளிக்கவில்லை.
வழக்கு
இதனையடுத்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சென்னை சுப்பிரமணியன், கடலூர் சண்முகசுந்தரம், ஈரோடு செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
அதில் 'ஜம்மு காஷ்மீர் உள்பட அனைத்து மாநிலங்களிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சீருடையில் பேண்டு வாத்தியம் முழங்க அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் அனுமதி மறுப்பது சட்டவிரோதமானது' என்று கூறப்பட்டு இருந்தது.
ஐகோர்ட்டு அனுமதி
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக கடந்த 22-ந்தேதி விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'அக்டோபர் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி போலீசார் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்' என்று கூறி இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
கோர்ட்டு அவமதிப்பு
ஐகோர்ட்டு உத்தரவிட்ட பின்னரும், திருவள்ளூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த போலீஸ் அனுமதி மறுத்துவிட்டது.
இது ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு முரணாக உள்ளதாக கூறி தமிழக அரசுக்கு கோர்ட்டு அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், 'அனுமதி வழங்க மறுத்த உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்படும்' என்றும் கூறப்பட்டு இருந்தது.
இதன்படி ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது. இதேபோல் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு தமிழக காவல்துறை சார்பிலும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்துவதாக அறிவித்த அதே நாளில் (அக்டோபர் 2-ந்தேதி) விடுதலை சிறுத்தைகள் கட்சியும் சமய நல்லிணக்க மனித சங்கிலி நடத்தப்போவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கு அதன் கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
ஊர்வலத்துக்கு தடை
இதற்கிடையே ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அனைத்து அமைப் பினரின் ஊர்வலத்துக்கும் தமிழகம் முழுவதும் தடை விதித்து தமிழக அரசு நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிக்க பரிசீலிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசிற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்ட நிலையில் பல்வேறு சட்டம் ஒழுங்கு காரணமாக ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய சட்டம் ஒழுங்கு சூழலில், மத்திய அரசால் 'பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா' அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில் அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றன.
மாநிலத்தில் மத உணர்வுகளை தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி கேட்கப்பட்டுள்ள அன்று சமய நல்லிணக்க பேரணி என்ற பெயரில் சில அமைப்புகள் ஊர்வலம், மனித சங்கிலி போன்றவற்றை நடத்த அனுமதி கோரியுள்ளது.
அனுமதி இல்லை
மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காக்கவும், கண்காணிக்கவும் காவல் துறையினர் முழு வீச்சில் இரவு பகலாக அனைத்து இடங்களிலும் ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க இயலாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.