தமிழ்நாட்டில் இன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்; போலீசார் கடும் கட்டுப்பாடு
|தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு போலீசார் சார்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு போலீசார் சார்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியன்று சென்னை உள்பட தமிழ்நாட்டில் 50 இடங்களில் ஊர்வலம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அதே நாளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் மனித சங்கிலி ஊர்வலம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
இதையடுத்து சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதை கருதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மனித சங்கிலி போராட்டத்துக்கும் போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்துவதற்கு நிபந்தனைகளுடன் சென்னை ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது. இந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை முடிவில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் 45 இடங்களில் 16-ந் தேதி (நாளை) ஊர்வலம் நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஏற்பாடுகள் செய்துள்ளனர். சென்னையில் மாநகர போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊர்வலம் நடைபெறவில்லை. ஆவடி போலீஸ் கமிஷனரக எல்லைக்குட்பட்ட கொரட்டூர் விவேகானந்தா பள்ளி, தாம்பரம் போலீஸ் கமிஷனர் எல்லைக்குட்பட்ட ஊரப்பாக்கம் சங்கரா பள்ளி ஆகிய 2 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் தொடங்கி நடக்கிறது. ஊர்வலம் முடிவில் பொதுக்கூட்டம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த ஊர்வலத்துக்கு கடும் கட்டுப்பாடு, 12 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட உள்ளது.