கரூர்
கரூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணி வகுப்பு ஊர்வலம்
|கரூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணி வகுப்பு ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
அணி வகுப்பு
தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்தது. இந்தநிலையில் உச்சநீதிமன்றம் 47 இடங்களில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஊர்வலம் செல்ல அனுமதி வழங்கும்படி தமிழக காவல் துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 12 கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிபந்தனையுடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஊர்வலத்துக்கு தமிழக காவல் துறை அனுமதி அளிக்கப்பட்டது.
ஊர்வலம்-கூட்டம்
அதன்படி கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கார் மற்றும் வேன்களில் வந்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மற்றும் பா.ஜ.க. இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் கரூர் திருக்காம்புலியூரில் திரண்டனர்.
நேற்று மாலை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நகர செயலாளர் ரத்தினகிரி தலைமையில் ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் வெள்ளை சட்டை, காக்கி பேன்ட், தொப்பி அணிந்த சேவகர்கள் மிடுக்குடன் அணி வகுத்து சென்றனர்.
இந்த ஊர்வலம் திருக்காம்புலியூரில் இருந்து தொடங்கி ஈரோடு சாலையில் உள்ள வேலுச்சாமிபுரத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து அங்கு பொதுக் கூட்டம் நடந்தது.
பலத்த பாதுகாப்பு
கரூரில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்ததால் நேற்று காலை முதலே மாநகர் பகுதி முழுவதும் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கடைவீதி, பஸ் நிலையங்கள் உள்பட அனைத்து முக்கிய இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.