< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை, ஆரணியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

திருவண்ணாமலை, ஆரணியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்

தினத்தந்தி
|
16 April 2023 10:03 PM IST

திருவண்ணாமலை, ஆரணியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற்றது.

திருவண்ணாமலை, ஆரணியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

சுதந்திரம் அடைந்து 75-ம் ஆண்டு நிறைவு விழா, டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் நூற்றாண்டு விழா மற்றும் ராமலிங்கசுவாமிகள் 200-ம் ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஆர்.எஸ்.எஸ். சார்பில் திருவண்ணாமலையில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஊர்வலத்தை மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் தொடங்கிய ஊர்வலம் காந்தி சிலை வழியாக மாட வீதியை சுற்றி வந்து சின்னக்கடை வீதி வழியாக சென்று செட்டி தெருவில் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து அண்ணா சிலை அருகில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக வடதமிழக ப்ராந்த கிராம விகாஸ் ப்ரமுக் எம்.டி.சங்கர் கலந்துகொண்டு பேசினார். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் மற்றும் பொதுகூட்டத்தின் போது திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆரணி


இதேபோல ஆரணி கொசப்பாளையம் தர்மராஜா கோவில் மைதானத்தில் இருந்து தொடங்கிய ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை ஆரணி ஜோதிடர் இரா.குமரேசன் தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் சின்னக்கடை வீதி, சுப்ரமணிய கோயில் தெரு, சாமி தெரு, தச்சூர் ரோடு, காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு வழியாக ஆரணிப்பாளையம் மாரியம்மன் கோவில் அருகாமையில் உள்ள என்.மகாலில் நிறைவு பெற்றது.

இதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில இணைச் செயலாளர் ராமகிருஷ்ண பிரசாந்த், மாவட்ட தலைவர் கோ.ராமநாதன், மாவட்ட இணை தலைவர் டாக்டர் பாமாவதி, வேலூர் கோட்ட செயலாளர் ஐயப்பன், தொழில் அதிபர்கள் எஸ்.அஸ்வந்த், பி.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆரணி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொறுப்பாளர் ஆர்.அருண் பிரசாத் நன்றி கூறினார்.

போலீஸ் பாதுகாப்பு

இதையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு சௌந்தர்ராஜன், ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் மோப்ப நாய் கொண்டு ஆங்காங்கே வெடிகுண்டு சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் செய்திகள்