< Back
மாநில செய்திகள்
குமரியில் 2 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

குமரியில் 2 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்

தினத்தந்தி
|
16 April 2023 11:01 PM IST

குமரியில் 2 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

நாகர்கோவில்:

குமரியில் 2 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.

கோர்ட்டு அனுமதி

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி தமிழகம் முழுவதும் அணிவகுப்பு நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு போலீஸ் அனுமதிகோரி இருந்தது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து கோர்ட்டில் முறையிட்டதை தொடர்ந்து, நவம்பர் 6-ந் தேதி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவு அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கவும் சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டது.

அதன் அடிப்படையில் நேற்று ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு நடத்த போலீஸ் அனுமதி வழங்கியது. அதன்படி நேற்று குமரி மாவட்டத்தில் 2 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

நாகர்கோவில்

குமரி கிழக்கு மாவட்ட ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. பேரணி நாகர்கோவில் நாகராஜாகோவில் திடலில் தொடங்கியது. இதையொட்டி அங்கு காவிக்கொடி ஏற்றப்பட்டு, பிரார்த்தனை பாடல் பாடப்பட்டது.

பின்னர் காவிக்கொடிக்கு பெண்கள் கர்ப்பூர ஆராத்தி எடுத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நகராஜாகோவில் திடலில் இருந்து பேரணி தொடங்கியது. பேரணியானது மணிமேடை, வேப்பமூடு சந்திப்பு, செட்டிக்குளம் வழியாக இந்து கல்லூரி மைதானத்தில் நிறைவு பெற்றது. வழியில் பொதுமக்கள் மலர் தூவி பேரணியை வரவேற்றனர்.

முன்னதாக பேரணியில் வீர சிவாஜி படம் வைக்கப்பட்ட வாகனமும் அணிவகுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் சிறிது நேரம் அங்கு வாக்குவாதம் நடந்தது. பின்னர் வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டு நிர்வாகிகள் ஊர்வலமாக சென்றனர்.

பொதுக்கூட்டம்

அணிவகுப்பு ஊர்வலம் முடிவில் இந்து கல்லூரி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் யோகாசனம் உள்ளிட்ட பயிற்சிகள் செய்து காண்பிக்கப்பட்டன. கூட்டத்துக்கு குமரி மாவட்ட இந்து ஆதி திராவிடர் அறக்கட்டளை தலைவர் வேலுதாஸ் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.எஸ். கிழக்கு மாவட்ட செயலாளர் பிரதீஷ் வரவேற்று பேசினார். கிழக்கு மாவட்ட தலைவர் ரகுபதி ராஜாராம், மாநில செயலாளர் பவீதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகர்கோவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட தலைவர் சக்தி சின்னதம்பி ஆசியுரை வழங்கினார். மாநில துணைப் பொருளாளர் ரமேஷ் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்த அணிவகுப்பு ஊர்வலம் நடத்த 6 மாதமாக சட்ட ரீதியான போராட்டம் நடைபெற்றது. நாம் நாட்டின் சட்டத்திட்டங்களை பின்பற்றி, நீதியின் மூலம் வெற்றிக் கண்டுள்ளோம்.

போரில் உதவி

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பாகிஸ்தான் போரிலும், சீனா போரிலும் ராணுவத்துக்கு உதவி செய்தது. அதை பார்த்து பிரதமர் ஜவகர்லால் நேரு 1963-ம் ஆண்டு டெல்லி குடியரசு தின விழாவில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி கொடுத்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ேபாடப்பட்டு இருந்தது.

அருமனை

இதுபோல் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் அருமனையில் நேற்று மாலையில் நடந்தது. இந்த அணிவகுப்பு ஊர்வலம் அருமனை அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் மைதானத்தில் இருந்து தொடங்கி அருமனை சந்திப்பு, மேலத்தெரு வழியாக குஞ்சாலுவிளை வி.டி.எம். கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் 1300-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து கல்லூரி மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். லட்சுமிபுரம் கல்லூரி பேராசிரியர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தென் மண்டல கொள்கை பரப்பு இணை செயலாளர் அய்யப்பன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 1925-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 98 ஆண்டுகளாக தனது பணியை சீராக செய்து வருகிறது. உலக நாடுகள் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பணி தொடர்ந்து நடைபெறுகிறது' என்றார்.

பேரணியை முன்னிட்டு மாவட்ட போலீசார் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன், குளச்சல் துணை சூப்பிரண்டு தங்கராமன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் செய்திகள்