< Back
மாநில செய்திகள்
ஆர்.எஸ்.எஸ். மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும்: போலீசாருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும்: போலீசாருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
6 Jan 2023 12:23 AM IST

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த கடும் நிபந்தனையுடன் அனுமதி வழங்க போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதால் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய 3 இடங்களில் மட்டும் அணிவகுப்பு ஊர்வலம் செல்ல அனுமதி வழங்கினர். மீதமுள்ள இடங்களில் அனுமதி வழங்க போலீசார் மீண்டும் மறுத்து விட்டனர்.

மேல்முறையீடு

இதையடுத்து தமிழ்நாடு டி.ஜி.பி. உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட 6 இடங்களைத் தவிர்த்து மற்ற 41 இடங்களில் சுற்றுச்சுவருடன் கூடிய உள்ளரங்குகள் அல்லது விளையாட்டு மைதானங்களில் அணிவகுப்பு பேரணியை நடத்திக்கொள்ள உத்தரவிட்டார். இதை ஏற்க மறுத்த மனுதாரர்கள், ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சு விசாரித்து வருகிறது. நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் என்.எல்.ராஜா, வக்கீல் ரபு மனோகர் ஆகியோர் ஆஜராகி, "வருகிற 29-ந்தேதி அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கேட்டு மனு அளித்தும், இதுவரை போலீசார் அனுமதி வழங்கவில்லை" என்றனர்.

எச்சரிக்கை

அதற்கு போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு குற்றவியல் வக்கீல் இ.ராஜ்திலக், "ஊர்வலத்துக்கு அனுமதி கேட்டு சுதந்திரமாக விண்ணப்பம் செய்யவில்லை. இந்த ஐகோர்ட்டு நிலுவையில் உள்ள வழக்கை சுட்டிக்காட்டியும், ஐகோர்ட்டு உத்தரவிட்டதாகவும் கூறி மனு கொடுத்துள்ளனர்" என்றார்.

இதற்கு நீதிபதிகள், "அவ்வாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றனர்.

பின்னர், கூடுதல் குற்றவியல் வக்கீலிடம், ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்காமல் மேற்கொள்ளப்படும் நடைமுறையைத்தான் பிற இயக்கங்களுக்கும் பின்பற்றப்படுகிறதா? அப்படியில்லை என்றால், ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கி நாங்களே உத்தரவிட நேரிடும்" என்று எச்சரிக்கை செய்தனர்.

ஒரே நடைமுறை

இதற்கு பதில் அளித்த அரசு குற்றவியல் வக்கீல், "வால்பாறை திராவிட தேயிலைத் தோட்டத் தொழிலாளர் சங்கம் சார்பில், வால்பாறை முதல் கோவை கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட கோர்ட்டு அவமதிப்பு வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. எனவே, எல்லா இயக்கங்களுக்கும் போலீசார் ஒரே விதமான நடைமுறையைத்தான் பின்பற்றுகின்றனர்" என்றார். பின்னர், இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற 20-ந்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்