அரசு பஸ்களில் இலவச பயணம் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.888 சேமிப்பு - தமிழக அரசு தகவல்
|அரசு பஸ்களில் இலவச பயணம் செய்வதன் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ.888 சேமிப்பு ஏற்படுவதாக தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழக சட்டசபையில் போக்குவரத்து துறைக்கான மானியக் கோரிக்கையை அமைச்சர் சிவசங்கர் நேற்று தாக்கல் செய்தார். அந்த துறையின் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா தொற்று காலத்தில் 2021-22-ம் ஆண்டில் அரசு பஸ்களில் நாளொன்றுக்கு 1.21 கோடி பேர் பயணம் செய்தனர். 2022-23-ம் ஆண்டில் பயணிகளின் எண்ணிக்கை 1.70 கோடியாக அதிகரித்து உள்ளது. தினமும் பயணிப்பவர்களில் 50 சதவீதம் பேர் சலுகை கட்டணத்தில் பயணிக்கின்றனர். அவர்களில் 40 சதவீதம் பேர் பெண்கள், மாணவர்கள், திருநங்கைகளாகும். 10 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர் ஆவர்.
பெண்களுக்கு கட்டணமில்லா பயணச்சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான ஆய்வு மேற்கொண்டதில் ஒவ்வொரு பெண் பயணியும் மாதம் ஒன்றுக்கு ரூ.888 வரை சேமிக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. அதுபோல பெண்கள் 256.66 கோடிக்கு மேல் பயண நடைகளை மேற்கொண்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் 7,164 சாதாரண நகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் தினமும் 45.51 லட்சம் பெண்கள் பயணிக்கின்றனர். இலவச பயண திட்டத்தால், அரசு பஸ்களில் பயணித்த பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 64.65 சதவீதமாக உயர்ந்துள்ளது.பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநகர போக்குவரத்து கழகத்தின் 2,500 பஸ்கள் மற்றும் 66 பணிமனைகளில் எச்சரிக்கை பட்டனுடன் கூடிய கண்காணிப்பு முறை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய தாழ்தள சிறப்பு பஸ்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னை, மதுரை, கோவையில் இயக்க 500 மின்சார பஸ்கள் கொள்முதல் செய்யப்படும். மாசு அளவை குறைக்க பி.எஸ்.-4 ரகத்தின் 3,213 பஸ்கள், 500 மின்சார பஸ்கள் அறிமுகம் செய்யப்படும்.
தமிழகத்தில் இயக்கப்படும் பஸ்களில் அரசு பஸ்களின் எண்ணிக்கை 72 சதவீதமாகும். மீதமுள்ள 28 சதவீதம் தனியார் பஸ்களாகும். அரசு போக்குவரத்துக் கழகத்தில் மொத்தம் 20 ஆயிரத்து 127 பஸ்கள் உள்ளன. 10 ஆயிரத்து 152 வழித்தடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. 28.2.2023 தேதியின்படி அரசு போக்குவரத்துக்கழகங்களுக்கு மொத்தம் 16 ஆயிரத்து 146 கோடி ரூபாய் கடன் நிலுவையில் உள்ளது.
தேனி மாவட்டம் மேலக்கூடலூரில் குமுளி பணிமனையில் பணிமனையுடன் கூடிய பஸ் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.