< Back
மாநில செய்திகள்
ரூ.6,000 வெள்ள நிவாரணம்: ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் விண்ணப்பம்
மாநில செய்திகள்

ரூ.6,000 வெள்ள நிவாரணம்: ரேஷன் கார்டு இல்லாத 5.5 லட்சம் பேர் விண்ணப்பம்

தினத்தந்தி
|
22 Dec 2023 10:48 AM IST

கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் கடந்த 17-ம் தேதி முதல் ரூ.6,000 நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை,

மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 மற்றும், 4-ம் தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான முடிச்சூர், முகலிவாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, மணலி, திருவொற்றியூர், அம்பத்தூர், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பல இடங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன. தற்போது பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வெள்ளநீர் வெளியேற்றப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகின்றது.

மிக்ஜம் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் கடந்த 17-ம் தேதி முதல் ரூ.6,000 நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிவாரண தொகையை பெற ரேஷன் கார்டு இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில் நிவாரண தொகை பெற ரேஷன் கார்டு இல்லாமல் சுமார் 5.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் சென்னையில் 4.90 லட்சம் பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29 ஆயிரம் பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 22 ஆயிரம் பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்