செங்கல்பட்டு
ரூ.4276.44 கோடியில் கடல் நீா் சுத்திகரிப்பு நிலையம்: நெம்மேலியில் கலெக்டர் ஆய்வு
|ரூ.4276.44 கோடியில் கடல் நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுதினம் திறக்க உள்ளார். இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று ஆய்வு பணியில் ஈடுபட்டார்.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலி ஊராட்சியில் உள்ள பேரூர் பகுதியில் உள்ள 86 ஏக்கர் நிலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சார்பில் ரூ.4276.44 கோடி மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை மறுதினம்(திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார். இதைதொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் நேற்று பேரூர் பகுதிக்கு நேரில் சென்று அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு மேடை அமைக்கும் பணிகள் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட விழா ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்
இதனையடுத்து அவர் திருவிடந்தையில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவில் குளத்தின் சீரமைப்பு பணி மற்றும் திருவிடந்தை ஊராட்சி மாடவீதியில் உள்ள சமையல் கூடத்தில் முதல் அமைச்சர் ஸ்டாலின் வரும் 25-ந் தேதி கானொலி காட்சி மூலம் தொடங்க உள்ள முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்தும் பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் திருவிடந்தை ஊராட்சியில், மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்ப பதிவு செய்ய இயலாத நபர்களுக்குமான சிறப்பு முகாமில் கலெக்டர் கலந்து கொண்டு குறைகள் கேட்டார்.
அதேபோல் நெம்மேலி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-22 ஆம் ஆண்டில் வட்டார நாற்றங்கால் நர்சரி முள்வேலி மற்றும் பசுமை வலை அமைத்தல் திட்டத்தில் ரூ.4.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் திருவிடந்தை ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-23 -ம் ஆண்டில் அங்கன்வாடி மையம் ரூ.13.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தையும் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் திருப்போரூர் ஒன்றிக்குழு தலைவர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன், நெம்மேலி ஒன்றிய கவுன்சிலர் எஸ்.தேசிங்கு, நெம்மேலி ஊராட்சி தலைவர் ரமணிசீமான், திருவிடந்தை ஊராட்சி தலைவர் அமுதாகுமார் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.