மதுரை
சொத்து பிணையம் இல்லாமல் 2 நாளில் மதுரை மாணவருக்கு ரூ.40 லட்சம் கல்வி கடன்
|தமிழகத்தில் முதன் முறையாக சொத்து பிணையம் இல்லாமல் 2 நாளில் மதுரை மாணவருக்கு ரூ.40 லட்சம் கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் அனீஷ் சேகர் பெருமிதத்துடன் கூறினார்.
தமிழகத்தில் முதன் முறையாக சொத்து பிணையம் இல்லாமல் 2 நாளில் மதுரை மாணவருக்கு ரூ.40 லட்சம் கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் அனீஷ் சேகர் பெருமிதத்துடன் கூறினார்.
இணையதளம்
மத்திய-மாநில அரசுகள் மாணவர்களுக்கு கல்வி கடன்கள் எளிதாக கிடைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக அனைவரும் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் www.vidyalakshmi.co.in என்ற இணையதளம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, வங்கிகள் மூலம் எளிதாக கடன் வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் கல்வி கடன் மாணவர்களுக்கு எளிதாக கிடைப்பதற்காக மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் இதற்காக சிறப்பு கடன் வழங்கும் முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த மாணவர் யோகேஸ்வரர் மதியழகன் என்ற மாணவருக்கு, விண்ணப்பம் செய்த 2 நாட்களில் எந்த பிணையமும் இல்லாமல் ரூ.40 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது.
இது குறித்து அந்த மாணவர் கூறியதாவது:-
மதுரையில் உள்ள வேலம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த 2022-ம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்தேன். அதன்பின் ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிக்க விண்ணப்பித்தேன். அங்கு வைத்த தேர்விலும் அதிக மதிப்பெண் எடுத்தேன். இதனால் அங்கு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அங்கு படிப்பதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது.
ரூ.40 லட்சம்
எனவே வங்கி கடன் குறித்து விசாரித்து கொண்டு இருந்தேன். அந்த சமயத்தில் மத்திய அரசின் கல்வி கடன் வழங்கும் www.vidyalakshmi.co.in என்ற இணையதளத்தில் கடந்த 29-ந் தேதி விண்ணப்பித்தேன். அந்த அடிலெய்ட் பல்கலைக்கழகம் உலக அளவில் மிக சிறந்த பல்கலைகழகம் அதே போல் நானும் 10 புள்ளிகளுக்கு 8.54 புள்ளிகள் எடுத்து தேர்ச்சி பெற்றேன். எனவே எனக்கு யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து உடனடியாக ரூ.40 லட்சம் கடன் வழங்கினார்கள். எனது தந்தை மதியழகன் ஒரு வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து கலெக்டர் அனீஷ் சேகர் கூறும் போது, மதுரை மாவட்டத்தில் கல்வி கடன் அதிகளவில் வழங்க முனைப்பு காட்டப்பட்டு வருகிறது. அதன்படி மாணவருக்கு விரைவாக கடன் வழங்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி. அந்த வங்கியை பாராட்டுகிறேன் என்றார். இது குறித்து வங்கியின் தெற்கு மாசி வீதி கிளை மேலாளர் சார்லஸ் கூறும் போது, அனைத்து வங்கிகளிலும் ரூ.7.5 லட்சம் வரை தான் பிணை இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது. ஆனால் எங்களது வங்கியில் வெளிநாடுகளில் உள்ள உலகின் தலைசிறந்த 150 கல்லூரிகளிலும் சேரும் மாணவர்களுக்கு எந்த பிணையும் இல்லாமல் கல்வி கடன் வழக்கப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் முதல் முறையாக மதுரையை சேர்ந்த யோகேஸ்வரர் மதியழகனுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார்.