விழுப்புரம்
செஞ்சியில் 2 பெண்களிடம் ரூ.37 ஆயிரம் அபேஸ் மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
|செஞ்சியில் 2 பெண்களிடம் ரூ.37 ஆயிரத்தை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனா்.
செஞ்சி,
பெரம்பலூரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் செஞ்சி அருகே கருங்கல், ஜல்லி உடைக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வெங்கடேசனை பார்ப்பதற்காக அவருடைய மனைவி அமுதா செஞ்சிக்கு வந்தார். அப்போது குடும்ப செலவிற்காக அமுதாவிடம் வெங்கடேசன் ரூ.30 ஆயிரத்தை கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிக்கொண்ட அவர், அதையும், தனது செல்போனையும் ஒரு பையில் வைத்துக்கொண்டு, ஊருக்கு செல்வதற்காக செஞ்சி கூட்டுசாலையில் நின்று கொண்டிருந்த விழுப்புரம் செல்லும் பஸ்சில் ஏறினார். பின்னர் சிறிது நேரம் கழித்து பார்த்தபோது, பணம் வைத்திருந்த பையை காணவில்லை. பஸ்சில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் சிலர், அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது.
மற்றொரு சம்பவம்
இதேபோல் அதே பஸ்சில் விழுப்புரம் வட்டம் ராம்பாக்கத்தை சேர்ந்த சுந்தரேசன் மனைவி சுந்தரி என்பவர் செஞ்சியில் இருந்து ஏற முயன்றார். அப்போது மர்மநபர்கள் சிலர், அவர் வைத்திருந்த பணப்பையை அபேஸ்செய்து கொண்டு சென்றனர். அந்த பையில் ரூ.7 ஆயிரம் இருந்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து செஞ்சி போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.