கள்ளக்குறிச்சி
காலணி கடைக்காரரின் மொபட்டில் இருந்த ரூ.36 ஆயிரம் அபேஸ்
|சின்னசேலத்தில் பட்டப்பகலில் காலணி கடைக்காரரின் மொபட்டில் இருந்த ரூ.36 ஆயிரத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
சின்னசேலம்
காலணி கடைக்காரர்
சின்னசேலம், அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் செந்தில்குமார்(வயது 47). இவர் சின்னசேலம்-மூங்கில்பாடி சாலையில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் காலணி கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் செந்தில்குமார் வழக்கம்போல நேற்று முன்தினம் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கல்லாபெட்டியில் வைத்திருந்த ரூ.36 ஆயிரத்தை எடுத்து தனது மொபட்டின் டிக்கியில் வைத்து பூட்டினார். மேலும் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்து வருவதற்காக சேலம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு வங்கி ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க சென்றார்.
ரூ.36 ஆயிரம் அபேஸ்
பின்னர் திரும்பி வந்து மொபட்டின் டிக்கியை திறந்து பார்த்தபோது அதில் இருந்த ரு.36 ஆயிரத்தை காணாமல் செந்தில்குமார் அதிர்ச்சி அடைந்தார். அவர் பணத்தை எடுத்து வர சென்ற நேரத்தில் யாரோ மர்ம நபர் டிக்கியை திறந்து பணத்தை அபேஸ் செய்து விட்டான். உடனே செந்தில்குமார் மொபட்டின் அருகே நின்று கொண்டிருந்தவர்கள் மற்றும் அருகில் உள்ள கடைக்காரர்களிடம் சென்று விசாரித்தார். ஆனால் யாரும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டனர். பின்னர் இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் செந்தில்குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் சின்னசேலம் போலீசார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை வலைவிசி தேடி வருகிறார்கள்.
பரபரப்பு
பட்டப்பகலில் மொபட்டில் வைத்திருந்த ரூ.36 ஆயிரத்தை மர்ம நபர் அபேஸ் செய்த சம்பவம் சின்னசேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.