அரியலூர்
மாற்றுத்திறனாளி வங்கி கணக்கிற்கு தவறுதலாக அனுப்பப்பட்ட ரூ.25 ஆயிரம்
|மாற்றுத்திறனாளி வங்கி கணக்கிற்கு தவறுதலாக அனுப்பப்பட்ட ரூ.25 ஆயிரம் திருப்பி அனுப்பப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கண்ணன் தோப்பு தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 36). மாற்றுத்திறனாளியான இவர் ஜெயங்கொண்டம் கடைவீதி 4 ரோடு சந்திப்பில் 20 ஆண்டுக்கு மேலாக பெட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 6-ந் தேதி மாலை 7 மணி அளவில் இவருடைய வங்கி கணக்கிற்கு ரூ.25 ஆயிரம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறிது நேரம் கழித்து மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் செல்போன் மூலம் வெங்கடேசனை தொடர்பு கொண்டு, அந்த பணத்தை மாற்றி அனுப்பிவிட்டதாகவும், எனவே அந்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து வெங்கடேசன் வங்கி மேலாளரை சந்தித்து, அது பற்றி ெதரிவித்தார். மேலும் அவர், ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்துக்கு சென்று இன்ஸ்பெக்டர் ஜெகநாத், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோரிடமும் அது பற்றி தெரிவித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் வங்கி மேலாளரிடம் பேசினார். பின்னர் வெங்கடேசன் செல்போனில் இருந்து ஜி பே மூலமாக அந்த பணத்தை உரியவரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வெங்கடேசனை போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.