திண்டுக்கல்
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2½ கோடி வருவாய்
|பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2½ கோடி வருவாய் கிடைத்தது.
பழனி முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வருகை தரும் பக்தர்கள் அலகு குத்தி, முடிக்காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர். மேலும் கோவில் உண்டியலில் பணம், தங்க பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று முன்தினம் பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதற்கு கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமை தாங்கினார். காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், பழனி பகுதி வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என பலரும் ஈடுபட்டனர்.
முதல் நாள் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 51 ஆயிரத்து 581-ம், தங்கம் 657 கிராம், வெள்ளி 9 கிலோ (9,217 கிராம்), வெளிநாட்டு கரன்சி 406-ம் கிடைத்தது. நேற்று 2-வது நாளாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் ரூ.56 லட்சத்து 61 ஆயிரத்து 505 வருவாயாக கிடைத்தது. தங்கம் 158 கிராம், வெள்ளி 19 கிலோ 85 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 83-ம் கிடைத்தன. இதன்மூலம் கடந்த 2 நாட்கள் எண்ணப்பட்ட உண்டியல் காணிக்கை மூலம் மொத்தம் ரூ.2 கோடியே 57 லட்சத்து 13 ஆயிரத்து 86 வருவாயாக கிடைத்தது. தங்கம் 815 கிராம், வெள்ளி 28 கிலோ 302 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 489-ம் கிடைத்திருந்தது.