< Back
மாநில செய்திகள்
தமிழ் வளர்ச்சிக்காக 2 ஆண்டுகளில் ரூ.134 கோடி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு
மாநில செய்திகள்

தமிழ் வளர்ச்சிக்காக 2 ஆண்டுகளில் ரூ.134 கோடி ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு

தினத்தந்தி
|
11 July 2022 9:39 PM IST

தமிழ் வளர்ச்சிக்காக 2 ஆண்டுகளில் சுமார் ரூ.134 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், உலக தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாகி கனகராஜ் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "ஐகோர்ட்டு உள்ளிட்ட கோர்ட்டுக்கள் பிறப்பிக்கும் தீர்ப்புகளை தமிழ் மொழியில் மொழிபெயர்த்து வெளியிடவும், தமிழ் மொழி மேம்பாடு குறித்து ஆய்வுகள் நடத்த அறிஞர்கள் குழுவை அமைக்கவும், அரபிய எண் முறைக்கு பதில் தமிழ் எண் முறையை அமல்படுத்தவும், அரசாணைகளை தமிழில் வெளியிடவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ் வளர்ச்சி துறை செயலாளர் மகேசன் காசிராஜனின் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது,

தமிழ் வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. தமிழ் ஆண்டு, தமிழ் மாதம் இவற்றை பயன்படுத்துகிறது. தமிழ் ஆராய்ச்சிக்காக 2013-ம் ஆண்டு 50 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்ட,து. அதன்பிறகும் ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

தமிழ் ஆராய்ச்சிக்கு 1971-ம் ஆண்டிலேயே தமிழ் மொழி வளர்ச்சி இயக்குனரகம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள், நிதி உதவிகள் வழங்கப்படுகிறது. தமிழ் வளர்ச்சிக்காக 2019-20ம் ஆண்டில் ரூ.70 கோடியே 91 லட்சம் ஒதுக்கப்பட்டது. அதில் 65 கோடியே 48 லட்ச ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. 2020-21ம் ஆண்டில் ரூ.63 கோடி ஒதுக்கப்பட்டு, அதில் 53 கோடியே 86 லட்ச ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்