தமிழக அரசு ரூ.13 ஆயிரம் கோடி கொடுத்திருந்தால் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது - முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி
|மின்வாரியத்திற்கு ரூ.13 ஆயிரம் கோடி கொடுத்து இருந்தால் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் இன்று முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :-
கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தாமல், அனைவருக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கினோம். தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்ந்தது.
தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்தால், பொதுமக்களின் மின் கட்டணத்தை குறைக்கும் வகையில் மாதந்தோறும் மின்சாரம் கணக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து ஓராண்டில் மின்சார கட்டணத்தை உயர்த்துகின்றனர்.
மின்கட்டண உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகிறார். மத்திய அரசும், வங்கிகளும் நஷ்டத்தில் உள்ள அரசு நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்காக அடிக்கடி இதுபோன்ற கடிதம் எழுதுவார்கள். ஆட்சியில் உள்ளவர்கள் தான் அதை சமாளிக்க வேண்டும்.
மின்வாரியத்தின் கடனை அடைக்க ஆண்டுக்கு ரூ.13 ஆயிரம் கோடி, மின்வாரியத்திற்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்தது. ஆனால் ரூ.3 ஆயிரம் கோடிதான் கொடுக்கப்பட்டது. ரூ.13 ஆயிரம் கோடி கொடுத்திருந்தால், மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
தமிக அரசின் நிர்வாக திறமையின்மையால் கடும் நெருக்கடியான நேரத்தில், பொதுமக்களை பற்றி சிந்திக்காமல் முதலில் சொத்து வரியை உயர்த்தினார்கள், தற்போது மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர், விரைவில் பஸ் கட்டணத்தையும் உயர்த்துவார்கள். அ.தி.மு.க சார்பில் மின்சார கட்டண உயர்வைக் கண்டித்து வருகிற 25-ந் தேதி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் தி.மு.க.வுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க அபார வெற்றிபெறும். வருகினற காலத்தில் தமிழகத்தின் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்பது உறுதியாகிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.