திருநெல்வேலி
தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க வேண்டும்-சங்க ஆண்டு விழாவில் வலியுறுத்தல்
|தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க வேண்டும் என்று ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆண்டு விழாவில் வலியுறுத்தப்பட்டது.
தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க வேண்டும் என்று ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆண்டு விழாவில் வலியுறுத்தப்பட்டது.
ஆண்டு விழா
நெல்லை மாவட்ட மத்திய, மாநில, உள்ளாட்சி மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் 9-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் ஓய்வூதியர் தின விழா நெல்லையில் நேற்று நடந்தது. கூட்டமைப்பு தலைவர் முத்துசாமி தலைமை தாங்கினார். அமைப்பாளர் சண்முகசுந்தர்ராஜ் வரவேற்றார். கண் டாக்டர் ராமகிருஷ்ணன், டாக்டர் சிவாபிரகாஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.
சிவசுப்பு பாண்டியன், ராதாகிருஷ்ணன், ஜெகநாதன், தேவிகா ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது.
தீர்மானம்
விழாவில், ஓய்வூதியர்களுக்கு தமிழக அரசு, மத்திய அரசு வழங்கும் தேதி முதல் அகவிலைப்படியை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி ஓய்வூதியர்களுக்கு 70 வயது பூர்த்தியாகும் நிலையில் 10 சதவீதம் ஓய்வூதியம் கூடுதலாக வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவப்படியை மத்திய அரசு வழங்குவது போல் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும். தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழாவில் அஞ்சல் மற்றும் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்க பொருளாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மாவட்ட துணை தலைவர் இரா. சீத்தாராமன், சிதம்பரம், நடேசன், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.