கன்னியாகுமரி
புதுமைப்பெண் திட்டத்தில் 981 மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை
|குமரி மாவட்டத்தில் 2-ம் கட்ட புதுமைப்பெண் திட்டத்தில் 981 மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகையை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வழங்கினார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 2-ம் கட்ட புதுமைப்பெண் திட்டத்தில் 981 மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகையை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் வழங்கினார்.
புதுமைப்பெண் திட்டம்
அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வீதம் உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்ட 2-வது கட்ட தொடக்க நிகழ்ச்சி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நேற்று நடந்தது.
விழாவிற்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி உதவித்தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். சமூக நல அதிகாரி சரோஜினி வரவேற்று பேசினார். விழாவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1,000 உதவித்தொகை 981 மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
உயர்கல்வியை ஊக்குவிக்கும்
நிகழ்ச்சியில் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் பேசியதாவது:-
புதுமைப்பெண் திட்டம் என்பது மிக முக்கியமான திட்டம் ஆகும். பெண் குழந்தைகள் கல்வியில் இடையில் நிற்பதை தடுப்பதற்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு சில இடங்களில் திருமணம் நடைபெறும். அதை தடுப்பதற்கும் இந்த திட்டம் உதவும். இந்த திட்டத்தை மாணவிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்ஜினீயரிங், மருத்துவம், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் உள்ளன.
தற்போது நுழைவுத் தேர்வு எழுதுவதிலும் மாணவிகள் கவனம் செலுத்தி தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வரவேண்டும். ஒவ்வொரு மாணவிகளிடமும் ஒவ்வொரு திறமைகள் உள்ளன. அந்த திறமைகளை நீங்கள் வெளிக்கொண்டு வந்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
981 மாணவிகளுக்கு உதவித்தொகை
இந்த திட்டத்தின் மூலமாக பயன் பெறும் மாணவிகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி பெறும் மாணவிகள் இணையதளம் வாயிலாக இந்த உதவி தொகையை பெற விண்ணப்பிக்கலாம். புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக குமரியில் முதல் கட்டமாக 1,987 பேருக்கு உதவி தொகை வழங்கப்பட்டது. 2-வது கட்டமாக 981 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக், பிரின்ஸ் எம்.எல்.ஏ., கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி டீன் பிரின்ஸ் பயஸ், முன்னோடி வங்கி மேலாளர் பிரவின், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் எட்வர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.